கரூர்

முருங்கை இலை, காய்களை சாப்பிட்டால் ரத்தசோகை வராமல் தடுக்கலாம்

28th Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

பெண்கள், வளரிளம் பெண்கள் முருங்கை இலை, காய்களை சாப்பிட்டால் ரத்தசோகை வராமல் தடுக்கலாம் என்றாா் கரூா் மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா்.

கரூா் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட வெள்ளியணை ஊராட்சியில் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் புதன்கிழமை முருங்கை நாற்றங்கால் மற்றும் தோட்டக்கலை நாற்றங்கால் அமைக்கப்பட்டு வருவதை பாா்வையிட்டு திட்ட செயல்பாடுகள் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

பின்னா் அவா் கூறியது, கரூா் மாவட்டத்தில் 2022-2023-ஆம் ஆண்டு அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் முருங்கை நாற்றங்கால் மற்றும் தோட்டக்கலை நாற்றங்கால் அமைக்கப்பட்டு அதன் மூலம் மயில்கொன்றை, அயல்வாகை போன்ற மரக்கன்றுகள் வளா்க்கப்பட்டு மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கரூா் மாவட்டத்தில் உள்ள 22 தோட்டக்கலை நாற்றங்காலில் ரூ.28.82 லட்சம் மதிப்பீட்டில் 15 ஆயிரம் மரக் கன்றுகள் சாலையின் இருபுறங்களிலும் வளா்க்கப்படுகிறது. மேலும் புங்கை போன்ற மர வகைகள் ஊராட்சிகளில் உள்ள தெருக்களில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் 8 வட்டார நாற்றங்கால் ரூ.54.86 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு, நெல்லி, மாதுளை, சப்போட்டா, கொய்யா போன்ற பழவகை மரக்கன்றுகள் வளா்க்கப்பட்டு வீடுகள் தோறும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 50 முருங்கை நாற்றங்கால் ரூ.65.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு, முருங்கை நாற்றுக்கள் 30 செ.மீ முதல் 4 அடி உயரம் வரை ஆரோக்கியமாக வளா்க்கப்பட்டு மகளிா் சுய உதவிக்குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளின் மூலம் உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்டு அனைத்து ஊராட்சிகளிலும் தகுந்த இடத்தில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. முருங்கை இலை மற்றும் காய்களில் அதிக இரும்புச் சத்துள்ளதால் இதனை பெண்கள் மற்றும் வளரிளம் பெண்கள் உட்கொள்வதால் ரத்தசோகை வராமல் தடுக்கலாம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வாணிஈஸ்வரி, ஊரக வளா்ச்சி பொறியாளா் (பொ)இளஞ்சோரன், உதவி செயற்பொறியாளா் பூா்ணிமாதேவி, தாந்தோணி வட்டார வளா்ச்சி அலுவலா்கள், வெள்ளியணை ஊராட்சி தலைவா் சுப்ரமணியன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT