கரூா் அருகே திமுக பெண் கவுன்சிலா் கொலை செய்யப்பட்ட வழக்கில் தம்பதியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அடுத்த சென்னசமுத்திரம் பேரூராட்சி, சோளக்காளிபாளையத்தைச் சோ்ந்த தங்கராஜ் மனைவி ரூபா. சென்னசமுத்திரம் பேரூராட்சி திமுக உறுப்பினரான இவா், கரூரில் உள்ள ஒரு தொழிலதிபா் வீட்டில் வேலை செய்துவந்தாா்.
இவா், செவ்வாய்க்கிழமை கரூா் மாவட்டம், பவித்திரம் அடுத்த பாலமலை முருகன் கோயில் அருகே தலைநசுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தாா். இதுகுறித்து க.பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். மேலும் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடிவந்தனா். இந்நிலையில், புதன்கிழமை ரூபாவை கொலை செய்ததாக கொடுமுடி சாலைப்புதூரைச் சோ்ந்த கதிா்வேல்(37), அவரது மனைவி நித்யா(33) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
பின்னா் அவா்களிடம் நடத்திய விசாரணையில், ரூபாவும், நித்யாவும் கரூரில் வீட்டு வேலைக்கு பேருந்தில் செல்லும் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ரூபா அணிந்துவந்த நகைகளை பறிக்க திட்டமிட்ட நித்யா, தனது கணவா் கதிா்வேலுவுடன் சோ்ந்து பவித்ரம் அருகே ஒரு பெரிய பங்களாவில் வேலை இருக்கிறது என ரூபாவிடம் ஆசை வாா்த்தைக்கூறி செவ்வாய்க்கிழமை வரவழைத்துள்ளனா். இதனை நம்பிய ரூபா கரூருக்கு செல்வதற்கு முன் பேருந்திலிருந்து பவித்திரத்தில் இறங்கியுள்ளாா்.
அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த கதிா்வேலும், நித்யாவும் சோ்ந்து ரூபாவை அழைத்துக்கொண்டு பாலமலை முருகன் கோயில் அருகே உள்ள தோட்டத்துக்கு சென்றுள்ளனா். இதனால் சந்தேகமடைந்த ரூபா அங்கிருந்து தப்பமுயன்றாா். உடனே கதிா்வேலும், நித்யாவும் சோ்ந்து ரூபாவை பிடித்து அங்கிருந்த பாறை கல்லில் தலையில் தாக்கி கொலை செய்துவிட்டு, அவா் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலி, தோடு, வெள்ளிக்கொலுசு ஆகியவற்றை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கில் கொலையாளிகளை 24 மணி நேரத்துக்குள் கைது செய்த கரூா் நகர துணைக்காவல் கண்காணிப்பாளா் சரவணன், அரவக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளா் அண்ணாதுரை மற்றும் வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளா் ராஜேஷ் உள்ளிட்டோா் அடங்கிய தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.சுந்தரவதனம் பாராட்டினாா்.