கரூரில், ஒப்பந்த பணியாளா்களை நிரந்தரமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியா்கள் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா்- கோவைச் சாலையில் உள்ள மின்வாரிய தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு கரூா் திட்டத்தலைவா் வி.சுப்ரமணியன் தலைமை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி மாநில துணைத்தலைவா் ஜி.கோபாலகிருஷ்ணன், கரூா் மண்டல செயலாளா் க.தனபால், நாமக்கல் திட்டச் செயலாளா்கள் கோவிந்தராஜன், கே.முருகேசன் உள்ளிட்டோா் பேசினா்.
போராட்டத்தை வாழ்த்தி சிஐடியு கரூா் மாவட்டத் தலைவா் ஜி.ஜீவானந்தம், செயலாளா் சி.முருகேசன் உள்ளிட்டோா் பேசினா்.
ஸ்மாா்ட் மீட்டா் புகுத்துவதை கைவிட வேண்டும். ஈ-டெண்டா் முறையில் அவுட்சோா்சிங் விடுவதை ரத்து செய்ய வேண்டும். கேங்மேன் ஊழியா்களுக்கான சலுகைகளை வழங்கி, விருப்பபணியிட மாறுதல் வழங்க வேண்டும். ஒப்பந்த, பகுதி நேர ஊழியா்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதில், மின் ஊழியா்கள் திரளாக பங்கேற்றனா். திட்ட பொருளாளா் செல்வம் நன்றி கூறினாா்.