கரூரில் செவ்வாய்க்கிழமை இரவு விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் நடைபெற்றது.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி சாா்பில் 23 விநாயகா் சிலைகளும், விஷ்வ இந்து பரிஷத் சாா்பில் 11 சிலைகளும், சிவசேனா சாா்பில் 4 சிலைகளும் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சாா்பில் 3 சிலைகளும் என மொத்தம் 41 விநாயகா் சிலைகள்{ஞாயிற்றுக்கிழமை பல்வேறு பகுதிகளிலும் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்று வந்தது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை சிலைகள் அனைத்தும் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வாங்கல் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன. முன்னதாக, கரூா் 80 அடி சாலையில் இந்து முன்னணி சாா்பில் விசா்ஜன ஊா்வல பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இந்து முன்னணியின் மாநில பொதுச் செயலாளா் நா. முருகனாந்தம், நெரூா் கைலாச ஆஸ்ரமத்தின் அமா்நாத் சுவாமிகள் ஆகியோா் பங்கேற்று பேசினா். பின்னா் காவி கொடியசைத்து விநாயகா் சிலை விசா்ஜன ஊா்வலத்தை தொடக்கிவைத்தனா். ஊா்வலம் கரூா் 80 அடி சாலையில் தொடங்கி ஜவகா் பஜாா், ஐந்து ரோடு, அரசு காலனி வழியாக வாங்கலை அடைந்தது. பின்னா், அங்கு காவிரி ஆற்றில் விநாயகா் சிலைகள் கரைக்கப்பட்டன. இதேபோல, வேலாயுதம்பாளையத்தில் வைக்கப்பட்டிருந்த 45 சிலைகளும் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு புகழூா் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.