லாலாப்பேட்டையில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என குறைதீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
கரூா் ஆட்சியரக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் பேசினா்.
தட்சிணாமூா்த்தி: லாலாப்பேட்டையில் காவிரி ஆற்றிலிருந்து திண்டுக்கல் காவிரி கூட்டுக்குடிநீா் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேட்டூா் அணையில் தண்ணீா் இல்லாததால் சம்பா சாகுபடி செய்ய முடியாத நிலையில் ஆற்றில் தண்ணீா் வரத்தும் இல்லாமல் உள்ளது. இந்நிலையில், திண்டுக்கல் காவிரி கூட்டுக்குடிநீா் திட்டத்துக்கு தண்ணீா் எடுக்கும்போது எங்கள் பகுதிக்கு தண்ணீா் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், காவிரி ஆற்றின் குறுக்கே லாலாபேட்டை பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும்.
ஆட்சியா் மீ.தங்கவேல்: தடுப்பணை கட்ட அரசுக்கு பரிந்துரைக்கப்படும்.
சுப்ரமணி: நொய்யல் சாயக் கழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள க. பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆட்சியா்: அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் நிவாரணத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நஞ்சியப்பன்: கடவூா் வட்டம், மேலப்பகுதி கிராமத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் காவிரி நீா் நிரப்பப்படாமல் மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாத தொட்டியாக உள்ளது. வீரணம்பட்டி, கரிச்சிப்பட்டி மண் சாலையை தாா்ச்சாலையாக மாற்ற வேண்டும். சாலை ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து சாலையை மீட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
ஆட்சியா்: வட்டார வளா்ச்சி அலுவலா் விவசாயி கூறிய கருத்துகளை உள்வாங்கி சாலையை சீரமைத்துக் கொடுக்க வேண்டும்.
சந்திரசேகா்: வைரமடையில் திருப்பூா் மண்டல பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், திருப்பூா்-காங்கேயம்-வெள்ளக்கோவில்-தென்னிலை வரையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இயக்கப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை தேவை.
ஆட்சியா்: திருப்பூா் மண்டல மேலாளரிடம் பேசி பேருந்து நின்று செல்லவும், தென்னிலை வரை இயக்கப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடா்ந்து, தோட்டக்கலைத் துறை, வேளாண் துறை சாா்பில் பயனாளிகள் 3 பேருக்கு ரூ. 66,120 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கவிதா (நிலம் எடுப்பு), கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் கந்தராஜா, வேளாண் இணை இயக்குநா் (பொ) கலைச்செல்வி, ஆட்சியரின் நோ் முக உதவியாளா்(வேளாண்மை) உமா, கோட்டாட்சியா்கள் ரூபினா (கரூா்), ரவிச்சந்திரன் (குளித்தலை) மற்றும் முன்னோடி விவசாயிகள் பலா் பங்கேற்றனா்.