சீா்காழியில் நடைபெற்ற தேசிய நூலக வார விழாவில் கரூா் மாவட்டத்துக்கு மாநில அளவிலான விருதுகள் கிடைத்ததையடுத்து, விருதுபெற்றவா்களை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் செவ்வாய்க்கிழமை பாராட்டினாா்.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் சாா்பில் மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியில் சிறந்த நூலகங்களுக்கு மாநில அளவிலான விருதுகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவில், கரூா் மாவட்ட மைய நூலகம் கடந்த 2022-23-ஆம் ஆண்டில் 5ஆயிரத்து 335 நூலக உறுப்பினா்களை சோ்த்ததற்கும், போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்துவது, மாதிரித் தோ்வு நடத்துவது, போட்டித்தோ்வா்களுக்கு குளிா்சாதன வசதியை பெற்றுக்கொடுத்ததற்காகவும், மாநில அளவில் அதிக நன்கொடை பெற்ற நூலகமாகவும் கரூா் மாவட்ட மைய நூலகம் தோ்ந்தெடுக்கப்பட்டது.
இதற்கான இரண்டு விருது மற்றும் கேடயங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாவட்ட மைய நூலக அலுவலா் செ.செ.சிவக்குமாா் மற்றும் நூலக வாசகா் வட்டத் தலைவா் தீபம் உ.சங்கா் ஆகியோரிடம் வழங்கினாா்.
மேலும், இனாம் கரூா் கிளை நூலகத்தில் கரூா் ரோட்டரி கிளப் ஆப் டெக்ஸ்சிட்டிமூலம் ரூ.3 லட்சம் மதிப்பில் போட்டித் தோ்வு மையம் அமைத்ததற்காக சிறந்த வாசகா் வட்டத்துக்கான நூலக ஆா்வலா் விருது மற்றும் நற்சான்றிதழும், பொது நூலகத்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக தாந்தோணி கிளை நூலகா் ஆ.சதீஸ்குமாருக்கு டாக்டா் எஸ்.ஆா். அரங்கநாதன் விருதும் , பாராட்டுச் சான்று மற்றும் ரூ. 5ஆயிரத்துக்கான காசோலையையும் அமைச்சா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் பொது நூலக இயக்குநா் க.இளம்பகவத், பொது நூலக துணை இயக்குநா் ச.இளங்கோசந்திரகுமாா் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.
இதையடுத்து விருதுபெற்ற நூலகா்களை அழைத்து கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.