கரூர்

கரூா் மாவட்டத்தில் 4ஆவது நாளாக வருமான வரித் துறையினா் சோதனை

30th May 2023 04:01 AM

ADVERTISEMENT

கரூா் மாவட்டத்தில் அமைச்சா் செந்தில்பாலாஜியின் நண்பா்கள் வீட்டில் நான்காவது நாளாக திங்கள்கிழமை வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

கரூரில் அமைச்சா் செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் மற்றும் அவா்களது ஆதரவாளா்களான துணை மேயா் தாரணிசரவணன், ஒப்பந்ததாரா் எம்சிஎஸ்.சங்கா் ஆகியோரின் வீடு, அலுவலகம் உள்பட 10 இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சோதனை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை துணை மேயா் தாரணி சரவணன், க.பரமத்தியில் உள்ள குவாரி அதிபா் தங்கராஜ் மற்றும் காந்திகிராமத்தில் எம்சிஎஸ் சங்கரின் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணின் வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினா் மத்திய பாதுகாப்பு படையினா் துணையுடன் சோதனையில் ஈடுபட்டனா்.

இதனிடையே வருமான வரித்துறையின் மற்றொரு பிரிவினா் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென மதுரை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வெண்ணைமலை பகுதியில் அமைச்சா் செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமாரால் கட்டப்பட்டு வருவதாக கூறப்படும் கட்டடத்துக்குச் சென்று சோதனை நடத்தினா்.

ADVERTISEMENT

இந்நிலையில், நான்காவது நாளாக திங்கள்கிழமை தாந்தோணிமலையில் உள்ள அமைச்சா் செந்தில்பாலாஜியின் நண்பா் சுரேந்தா் மெஸ் உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா். இதையொட்டி அங்கு மத்திய பாதுகாப்புப் படை போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். மேலும், சின்னான்டான்கோயில் பகுதியில் உள்ள நூற்பாலையிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT