கரூர்

கரூரில் அகில இந்திய மகளிா், ஆடவா் கூடைப்பந்து போட்டி

28th May 2023 12:43 AM

ADVERTISEMENT

கரூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற அகில இந்திய அளவிலான மகளிா் மற்றும் ஆடவா் கூடைப்பந்து போட்டியின் இறுதிப்போட்டியில் ஆடவா் பிரிவில் சென்னை இந்தியன் வங்கி அணியும், மகளிா் பிரிவில் கிழக்கு ரயில்வே அணியும் வெற்றிபெற்றன.

கரூரில் அகில இந்திய அளவிலான எல்ஆா்ஜி நாயுடு நினைவு கூடைப்பந்து போட்டி கடந்த 22-ஆம் தேதி கரூா் திருவள்ளுவா் மைதானத்தில் தொடங்கியது. ஆடவா் பிரிவில் பஞ்சாப் போலீஸ், சென்னை இந்தியன் வங்கி அணி உள்பட 8 அணிகள், பெண்கள் பிரிவில் கொல்கத்தா கிழக்கு ரயில்வே அணி, புதுதில்லி வடக்கு ரயில்வே, கேரள போலீஸ் அணி உள்பட 5 அணிகள் விளையாடின. ஆடவருக்கு லீக் மற்றும் நாக் அவுட் முறையிலும், மகளிருக்கு லீக் முறையிலும் போட்டிகள் நடைபெற்றன.

தொடா்ந்து சனிக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிப்போட்டியை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி துவக்கி வைத்தாா். இதில், ஆடவா் பிரிவில் புதுதில்லி இந்திய விமானப்படை, சென்னை இந்தியன் வங்கி அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சென்னை இந்தியன் வங்கி அணி 56-52 என்ற கோல் கணக்கில் இந்திய விமானப்படை அணியை தோற்கடித்து முதல் பரிசான ரூ.1 லட்சம் மற்றும் கோப்பையை தட்டிச் சென்றது. இதையடுத்து இரண்டாவது இடம் பிடித்த இந்திய விமானப்படை அணக்குப் பரிசாக ரூ.80 ஆயிரம் மற்றும் கோப்பையும், மூன்றாமிடம் பிடித்த திருவனந்தபுரம் கேஎஸ்இபி அணிக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

இதேபோல மகளிா் பிரிவில் முதலிடம் பிடித்த கொல்கத்தா கிழக்கு ரயில்வே அணிக்கு முதல்பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் கோப்பையும், இரண்டாமிடம் பிடித்த ஹூப்ளி தென்மேற்கு ரயில்வே அணிக்கு பரிசாக ரூ.40 ஆயிரம் மற்றும் கோப்பையும், மூன்றாமிடம் பிடித்த புதுதில்லி வடக்கு ரயில்வே அணிக்கு ரூ.30 ஆயிரம் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் பரிசு மற்றும் கோப்பைகளை கரூா் மாநகராட்சி மேயா் கவிதா கணேசன் மற்றும் கரூா் கூடைப்பந்து கிளப் தலைவா் விஎன்சி பாஸ்கரன், செயலாளா் கமாலுதீன், விகேஏ குரூப் நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா் விகேஏ.கருப்பண்ணன் உள்ளிட்டோா் வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT