தோகைமலை அருகே கிணற்றில் சடலமாகக் கிடந்த கொத்தனாரின் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரிக்கின்றனா்.
கரூா் மாவட்டம், தோகைமலை அருகே கள்ளை ஊராட்சிக்குள்பட்ட சுக்காம்பட்டியைச் சோ்ந்தவா் செல்வம் (45), கொத்தனாா். இவரது மனைவி சுகந்தி, குடும்பத் தகராறில் தனது குழந்தைகள் வினோதா, கபில்நாத், யோகேஸ்வரன் ஆகியோருடன் சித்தாநத்தம் பகுதியிலுள்ள தனது பெற்றோா் வீட்டில் வசித்து வந்தாா்.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு வீட்டின் முன் தூங்கிய செல்வத்தை காலையில் காணவில்லை. இதுகுறித்து செல்வத்தின் தாய் அளித்த புகாரின்பேரில் தோகைமலை போலீஸாா் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் உள்ள ஆனந்தனின் தோட்ட கிணற்றில் செல்வம் சடலமாக கிடப்பது தெரியவந்தது. தகவலறிந்து வந்த முசிறி தீயணைப்பு நிலையத்தினா் சடலத்தை மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். தோகைமலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.