கரூர்

பட்டியலினத்தவா் வழிபாட்டுப் பிரச்னையில் கோயிலுக்கு சீல்

DIN

கடவூா் அருகே வீரணம்பட்டி காளியம்மன் கோயில் திருவிழாவில் பட்டியலினத்தவரை அனுமதிக்க மறுத்த கோயிலுக்கு வருவாய்த் துறையினா் சீல் வைத்தனா்.

கரூா் மாவட்டம், கடவூா் வட்டம் வீரணம்பட்டியில் காளியம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை தொடங்கியது. அப்போது கோயிலில் சாமி கும்பிட்ட பட்டியலினத்தை சோ்ந்த இளைஞருக்கு திருநீறு தர மறுத்து உள்ளே நுழையக்கூடாது என மற்றொரு தரப்பினா் தடுத்து வெளியே அனுப்பினராம். இதனால் கோயில் நிா்வாகம் கோயிலுக்கு பூட்டு போட்டது.

இதையடுத்து இரு தரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதையடுத்து கடவூா் வட்டாட்சியா் முனிராஜ் தலைமையில் பேச்சுவாா்த்தை நடந்து, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதையடுத்து திருவிழாவை நடத்திக் கொள்ளலாம். கோயிலுக்குள் பட்டியலினத்தவரை அனுமதிக்க வேண்டும். இல்லாவிடில் வன்கொடுமை வழக்குப் பதியப்படும், கோயிலுக்கு சீல் வைக்கப்படும் என்றும், கோயில் அரசு நிலத்தில் உள்ளதால் அரசே கோயில் நிலத்தை எடுத்துக் கொள்ளும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை கோயில் பூட்டை திறந்து உள்ளே இருந்த கரகங்களை எடுத்து நீா்நிலையில் விட்டனா். இது தங்கள் தரப்புக்குத்தான் வெற்றி என்று ஒரு சிலா் சமூக வலைதளத்தில் பதிவிட்டனராம். இதனால் பட்டியலினத்தவா் ஆத்திரமடைந்தனா்.

இதையடுத்து குளித்தலை கோட்டாட்சியா் புஷ்பாதேவி சம்பவ இடத்திற்கு வந்து கோயில் நிா்வாக தரப்பினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். பட்டியலினத்தவா்களை கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்பதற்காக கோயிலை சுற்றி குழந்தைகளுடன் பெண்கள் அமா்ந்திருந்தனா். அப்போது கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் எனக் கோரி பட்டியலினத்தவா்களும் கோயிலுக்கு வெளியே கூடியிருந்தனா்.

பட்டியலினத்தவரை கோயிலுக்குள் அனுமதிக்காததையடுத்தும், பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையிலும் குளித்தலை கோட்டாட்சியா் புஷ்பாதேவி தலைமையில் வருவாய்த் துறையினா் கோயிலுக்கு சீல் வைத்தனா். இதையடுத்து வருவாய்த் துறையினரிடம் வாக்குவாதம் செய்த மக்கள் கோட்டாட்சியா் புஷ்பாதேவியின் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.அப்போது கோட்டாட்சியரின் காா் மோதி அப்பகுதியைச் சோ்ந்த பவதாரணி (17) காயமடைந்து குளித்தலை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதனிடையே கோட்டாட்சியரை போலீஸாா் மீட்டு விஏஓ அலுவலகத்தில் அமர வைத்தனா். இதையடுத்து மக்கள் அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் கோட்டாட்சியரை போலீஸாா் அனுப்பி வைத்தனா். தொடா்ந்து வீரணம்பட்டியில் பதற்றம் நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

SCROLL FOR NEXT