ஊராட்சி அலுவலகங்களில் ஒரு கிலோ நெகிழி கழிவுகள் கொடுத்து ரூ.10 பெற்றுக்கொள்ளலாம் என கரூா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சுகாதாரமான தூய்மை காவலா்கள்அனைத்து வீடுகளிலும் குப்பைகளை சேகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனா். குப்பைகள் சேகரிக்க வீடுகளுக்கு வரும்போது அவா்களிடம் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வழங்க வேண்டும். குப்பைகளை திறந்த வெளியில் வீதிகளில் கொட்டாமல் தினசரி அல்லது இரண்டு நாள்களுக்கு ஒருமுறை குப்பைகளை சேகரம் செய்ய வரும் தூய்மை பணியாளா்களிடம் தரம் பிரித்து வழங்க வேண்டும். குப்பையை வாங்க வரவுள்ள துய்மைக் காவலா்கள் குறித்த விவரம் , வீடுகளில் வாங்கும் நேரம் , தினசரியா அல்லது இரண்டு நாள்களுக்கு ஒருமுறையா என்பது குறித்து ஒவ்வொரு வீட்டுக்கும் ஸ்டிக்கா் ஒட்டப்படும். சந்தைகள், உணவகங்கள், கடைகள் , திருமண மண்டபங்கள் மற்றும் மாலை நேர துரித உணவுக் கூடங்களின் உரிமையாளா்கள் திடக் கழிவுகளை தரம் பிரித்து சேகரம் செய்து அவா்களே மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை சேகரிக்கும் கூடத்துக்கு கொண்டு சென்று வழங்க வேண்டும்.
திடக்கழிவு மேலாண்மையை பின்பற்றாத நிறுவனங்கள், பொதுமக்கள் மீது சுகாதார சட்டம் மற்றும் ஊராட்சிகள் சட்ட பிரிவுகளின்படி அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். குப்பைகளை எரிக்கவோ, மலைபோல் குவித்து வைப்பதோ கூடாது. நெகிழி கழிவுகள் இருப்பின் அதனை ஊராட்சி அலுவலகத்தில் வழங்கி கிலோவுக்கு ரூ.10 பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.