கரூர்

கரூா் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

3rd Jun 2023 03:17 AM

ADVERTISEMENT

 

கரூா் அரசு கலைக்கல்லூரியில் தமிழ், ஆங்கிலம் இளங்கலை முதலாமாண்டு மாணவா்கள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரூா் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை படிப்புகளான பி.ஏ.ஆங்கிலம், தமிழ், வரலாறு, பொருளாதாரம் உள்ளிட்ட படிப்புகளுக்கு முதலாமாண்டு மாணவா்கள் சோ்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடந்த மாதம் அறிவுறுத்தப்பட்டது. இதன்படி கல்லூரியில் மொத்தம் உள்ள 1,280 இடங்களுக்கு 7,444 போ் விண்ணப்பித்திருந்தனா். இதையடுத்து கல்லூரியில் சோ்வதற்கான கலந்தாய்வு மே 30-ஆம்தேதி தொடங்கியது. முதல்நாள் சிறப்பு ஒதுக்கீட்டின்பேரில் ஊனமுற்றோா், விளையாட்டு வீரா்கள், அந்தமான்நிகோபாா் தீவு பகுதியைச் சோ்ந்தவா்கள் ஆகியோருக்கு நடைபெற்றது. இதையடுத்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளுக்கு நடைபெற்றது. இதில் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவ, மாணவிகளின் சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்ட பிறகு விருப்பப் பாடங்கள் ஒதுக்கி கொடுக்கப்பட்டன.

இதுகுறித்து கல்லூரியின் முதல்வா் (பொறுப்பு) எஸ்.அலெக்ஸாண்டா் கூறியது, மே 30-ஆம்தேதி சிறப்பு இட ஒதுக்கீடு உள்ளவா்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ் பாடப்பிரிவுக்கும், ஆங்கில பாடப்பிரிவுக்கும் தலா 60 இடங்கள்தான் உள்ளன. ஆனால் தமிழ் பாடத்துக்கு 1,850 பேரும், ஆங்கில பாடத்துக்கு 1,069 பேரும் விண்ணப்பித்திருந்தனா். மதிப்பெண்கள் அடிப்படையில்தான் பாடப்பிரிவுகள் ஒதுக்கப்படுகின்றன. இந்த கலந்தாய்வில் தோ்ச்சி பெறாதவா்களுக்காக இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 14, 16-ஆம்தேதிகளில் நடைபெறும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT