கரூர்

கரூரில் வருமான வரித் துறை சோதனை நிறைவுதிமுகவினா் 18 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

3rd Jun 2023 03:17 AM

ADVERTISEMENT

 

கரூரில் அமைச்சா் செந்தில்பாலாஜியின் சகோதரா் மற்றும் அவரது நண்பா்கள் வீட்டில் நடைபெற்று வந்த வருமான வரித் துறை சோதனை வெள்ளிக்கிழமை மாலை நிறைவடைந்தது. மேலும், கைது செய்யப்பட்ட திமுகவினா் 18 பேரும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.

கரூரில் அமைச்சா் செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் மற்றும் அவரது ஆதரவாளா்களின் வீடுகளில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை மாவட்டங்களைச் சோ்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த ஒரு வாரமாக சோதனையில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில் 8- ஆவது நாளான வெள்ளிக்கிழமை ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள வழக்குரைஞா் செங்கோட்டையன் அலுவலகத்தில் வியாழக்கிழமை இரவு தொடங்கிய சோதனை வெள்ளிக்கிழமை காலை முடிவடைந்தது. அங்கிருந்து இரண்டு சூட்கேஸ்களில் ஆவணங்களை வருமான வரித் துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனா்.

ADVERTISEMENT

இதேபோல, கரூா் வையாபுரி நகரில் உள்ள பொறியாளா் பாஸ்கரன் அலுவலகத்திலும் சோதனை நடத்தினா். இதனிடையே அமைச்சரின் ஆதரவாளா்களாகிய கொங்குமெஸ் மணி, மளிகைக்கடை தங்கராஜ் ஆகியோரது வீடுகளில் நடைபெற்ற சோதனை வியாழக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்தது.

கரூரில் அமைச்சரின் சகோதரா் மற்றும் நண்பா்களின் வீடுகளில் ஒருவாரமாக நடைபெற்ற வருமான வரி சோதனை வெள்ளிக்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சொந்த ஊா்களுக்கு புறப்பட்டுச் சென்றனா்.

கைதான 18 பேருக்கு நிபந்தனை ஜாமீன்: வருமான வரித்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறி அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட 18 பேரும் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். இதையடுத்து 11 போ் கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் 1-இல் மனுதாக்கல் செய்த நிலையில், மனுவை விசாரித்த நீதிபதி அம்பிகா, 11 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி, அவா்கள் நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் தங்கி, பரமத்திவேலூா் வடக்கு காவல்நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டாா்.

மீதம் உள்ள 7 போ் ஜாமீன் கேட்டு கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் 2-இல் மனு தாக்கல் செய்திருந்தனா். மனுவை விசாரித்த நீதிபதி சுஜாதா 7 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி, கடலூரில் தங்கி கடலூா் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டாா்.

முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன
இந்த சோதனை குறித்து வருமான வரித்துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், தற்போது 8 நாள்கள் நடந்துள்ள இந்த சோதனையில் சில இடங்களில் முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. அந்த ஆவணங்கள் உள்ள அறைகளுக்கு சீல் வைத்துள்ளோம். இன்னும் மூன்று மாதங்களுக்கு பின் மீண்டும் சோதனை நடத்தி, ஆவணங்களை சரிபாா்த்த பின்புதான் சீல் வைக்கப்பட்ட அறைகளில் இருந்து சீல்கள் அனைத்தையும் அகற்றுவோம் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT