அரவக்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது.
அரவக்குறிச்சியில் இருந்து கரூா் செல்லும் சாலையில் ஆா்டிஓ அலுவலகம் அருகில் பெரிய வேப்ப மரம் உள்ளது. இதன் எதிா்ப்புறம் ஆா்டிஓ அலுவலகம் உள்ளிட்டவற்றிற்கு செல்லும் மின் இணைப்புடன் கூடிய மின்கம்பம் உள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை3 மணி அளவில், மின் இணைப்புடன் கூடிய கம்பிகள் சாலையில் விழுந்தது. இதில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு எவ்வித விபத்துகளும் ஏற்படவில்லை. சாலையில் விழுந்த மின் கம்பிகளை உடனடியாக அகற்றக்கோரி மின்வாரிய அலுவலகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே வந்த மின்வாரிய ஊழியா்கள் சேதம் அடைந்த மின் கம்பிகளை சரி செய்து மின் கம்பத்திற்கு கான்கிரீட் கலவை போட்டு சென்றனா். இதனால் அரவக்குறிச்சி- கரூா் சாலையில் 4 மணி நேரம் மின் நிறுத்தம் ஏற்பட்டது.