உத்தம பாளையத்தில் மதுரை கூட்டுக் குடிநீர் திட்ட இரும்புக் குழாயில் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் புதிதாக திருமணமான மாப்பிள்ளை உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் வீரபாண்டி கிழக்கு தெருவை சேர்ந்த பால்சாமி மகன் அசோக்குமார்(25) மற்றும் இவரது மனைவி நந்தினி.
இருவருக்கும் சமீபத்தில் திருமண நடந்துள்ளது. இதற்கிடையே வெள்ளிக்கிழமை (மே 19) இருசக்கர வாகனத்தில் வீரபாண்டியிலிருந்து உத்தமபாளையம் அனுமந்தன்பட்டி புறவழிச்சாலை வழியாக கம்பம் நோக்கி மாமியார் வீட்டிற்குச் சென்றனர்.
அப்போது மதுரை லோயர் கேம்ப் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக குழாய்கள் பதிக்கும் பணி நடைபெறுகிறது. இந்நிலையில் உத்தமபாளையம் - அனுமந்தன்பட்டி புறவழிச் சாலை இடையே அமைந்துள்ள முல்லைப் பெரியாறு ஆற்று பாலம் அருகே சாலை ஓரத்தில் பாதுகாப்பின்றி போட்டு வைத்த குழாய் மீது இருசக்கர வாகனம் மோதியது.
இதில் அசோக் குமார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே பலியானார். இவரின் மனைவி நந்தினி படுகாயம் அடைந்து க. விலக்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உத்தமபாளையம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.