இந்தியா

முதல்வர் பதவியை சிவக்குமார் விட்டுக்கொடுத்ததன் பின்னணி: சோனியாவின் அந்த ஒரு வார்த்தை

18th May 2023 12:04 PM

ADVERTISEMENT


கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியைப்பிடித்துள்ளது. ஆனால், அங்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது முதல் முதல்வர் பதவிக்கான கடும் போட்டி எழுந்தது.

இந்த நிலையில், தேசிய காங்கிரஸ் கட்சி, கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக டி.கே. சிவக்குமாரும் பதவியேற்கும் வகையில் முடிவு எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இன்னமும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், தலைவர்கள் பலரும் அவ்வாறு பேசிவருகிறார்கள். முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்த டி.கே. சிவக்குமாரும் மாநில நன்மைக்காக சித்தராமையா முதல்வராகலாம் என்ற பாணியில் பேசத் தொடங்கிவிட்டார். அதனால், அவர் துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்கிறார் என்பது மறைமுகமாக தெளிவாகிறது.

இதையும் படிக்க.. கர்நாடக முதல்வராக சித்தராமையா தேர்வு: ஒரு சின்ன டிவிஸ்டும் வைத்த காங்கிரஸ்

ADVERTISEMENT

கட்சிக்காகப் பாடுபட்டு, பல இன்னல்களை சந்தித்து, மாநிலத்தில் பெரும்பான்மை வெற்றி பெற உதவி, முதல்வர் கனவுடன் இருந்த டி.கே. சிவக்குமார், இப்படி ஒரே நாளில் தில்லி சென்று திரும்பியதும் மனம் மாறியது எப்படி? இழுபறியாக இருந்த பேச்சுவார்த்தை, சிவக்குமார், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாவை சந்தித்ததும் முடிவுக்கு வந்தது எப்படி?

கட்சியின் நலன் கருதியே, சிவக்குமார் முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க முன்வந்திருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கர்நாடக நலனும் இதில் அடங்கியிருந்தாலும், அவர் மகிழ்ச்சியோடு பதவியை விட்டுக்கொடுக்கவில்லை என்றும் அவரது சகோதரர் சுரேஷ் குறிப்பிட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியின் மூத்த மற்றும் முக்கிய தலைவர்கள் பலரையும் நேற்று சித்தராமையாவும், சிவக்குமாரும் தில்லியில் சந்தித்துப் பேசினர். கடைசியாக, சோனியா காந்தியிடம் சிவக்குமார் பேசியபிறகுதான், கர்நாடக மாநிலத்தில் துணை முதல்வர் பதவியை சிவக்குமார் ஏற்றுக் கொள்ள ஒப்புக்கொண்டுள்ளார்.

சனிக்கிழமை பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றும், அதிகாரத்தை சம அளவில் பிரிப்பதற்கான வேலைகள் நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இவ்வளவு கடும்போட்டிக்கு இடையே துணை முதல்வர் பதவியை சிவக்குமார் ஒப்புக் கொண்டதற்கு காரணம், சோனியாவின் அந்த ஒரு சொல்தான் என்கிறது தகவலறிந்த வட்டாரங்கள்.

ஆங்கில ஊடகத்துக்கு சிவக்குமார் அளித்த பேட்டியில், சோனியா காந்தி என்னிடம் இவ்வாறு கூறினார், கர்நாடக மாநிலத்தைக் காப்பாற்றுவீர்கள் என்று எனக்கு உங்கள் மீது அதீத நம்பிக்கை இருக்கிறது. நான் இங்கு அமர்ந்துகொண்டு எனது அடிப்படையான பொறுப்புகளை கவனித்து வருகிறேன். நீங்களும் உங்களது அடிப்படை பொறுப்புகளை கவனியுங்கள், கட்சியின் மீது நம்பிக்கையும் நன்றியும் கொண்டிருங்கள். இந்த வெற்றிக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்ற உண்மையை அவர்களும் புரிந்துகொள்வார்கள் என்று கூறியதாகவும், இந்த வார்த்தைதான் சிவக்குமாரின் மனதை மாற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT