தற்போதைய செய்திகள்

ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

18th May 2023 11:32 AM

ADVERTISEMENT

புது தில்லி: ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தடையில்லை என்று ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வியாழக்கிழமை (மே 18) தீர்ப்பளித்துள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய், சி.டி. ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து வந்தது.

வழக்குத் தொடுத்த மனுதாரர்கள் தரப்பில் முதலில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, தமிழக அரசின் தரப்பிலும், மத்திய அரசின் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில், அரசியல் சாசன அமர்வு முன் கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி இறுதி வாதம் நடைபெற்றது. 

ADVERTISEMENT

அப்போது, விலங்குகள் நல அமைப்பான பீட்டா உள்ளிட்ட பல்வேறு மனுதாரர்கள் தரப்பில் எதிர்வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இதையடுத்து, வாதங்கள் முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதிகள் அமர்வு ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான அமர்வு வியாழக்கிழமை (மே 18) ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடையில்லை என்று தீர்ப்பு அளித்துள்ளது. 

சென்னை மெரீனாவில் நடைபெற்ற போராட்டங்களை சுட்டிக்காட்டி நீதிபதிகள் தீர்ப்பை வாசித்தனர்.

நீதிபதிகள் தீர்ப்பில், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழ்நாடு அரசு அளித்த ஆவணங்கள் திருப்தி அளிக்கும் வலையில் உள்ளன. 

ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாசாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என்ற தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்தத்தை ஏற்றுக்கொள்கிறோம்.

கலாசாரம் என்றாலும் கூட துன்புறுத்தலை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு கலாசார அடையாளம் என மாநில சட்டப்பேரவை சட்டம் இயற்றும் போது நீதிமன்றத்தால் மறுக்க இயலாது. 

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத் திருத்தம் செல்லும். அதனை ஏற்றுக் கொள்கிறோம்.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் எங்களுக்கு அனுப்பப்பட்ட 5 கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு தொடர்பாரக தமிழ்நாடு அரசின் சட்டம் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் இல்லை. 

எனவே, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடையில்லை என்று  நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT