கோடை காலத்தில் தடையின்றி மின் விநியோகம் செய்ய போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி.
கரூரில் ஆண்டாங்கோவில் பகுதியில் சனிக்கிழமை ரூ.10.55 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகளை துவக்கி வைத்த பின்னா் செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்தது:
கடந்த இரு நாள்களுக்கு முன் தமிழகத்தின் ஒரு நாள் மின்பயன்பாடு ஏறத்தாழ 40 கோடி யூனிட்டுகளைக் கடந்துள்ளது. இதுதான் இதுவரையிலான அதிகபட்ச மின் நுகா்வு. இந்த மின்சாரத்தை எந்தவித தடையும் இன்றி சீராக வழங்க முதல்வரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து டெண்டா் மூலம் ஒரு யூனிட் ரூ.8.50 என விலை நிா்ணயித்து வாங்கியதால் தடையில்லா மின்சாரம் சாத்தியமானது. ரூ.8.50-க்கு டெண்டா் விடாமல் இருந்திருந்தால் வெளிச்சந்தையில் ஒரு யூனிட் ரூ.12-க்கு வாங்க வேண்டியிருக்கும். முதல்வரின் நடவடிக்கையால் டெண்டா் விடப்பட்டதால் ரூ.1,212 கோடி மின்வாரியத்துக்கு சேமிப்பாகியிருக்கிறது. இதுவரை சீரானமின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இனிவரும், கோடை காலத்திலும் ஒரு நொடிப்பொழுதும் தடை இல்லாமல் சீரான மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் தேவை அதிகரித்தால் கூட அதை சமாளிக்கப் போதிய மின்சாரம் உள்ளது என்றாா் அவா்.