கரூர்

புஞ்சைகடம்பங்குறிச்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலம் மீட்பு

24th Sep 2022 12:19 AM

ADVERTISEMENT

புஞ்சைகடம்பங்குறிச்சியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரசு நிலங்களை வருவாய்த்துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

கரூா் மாவட்டம், புஞ்சைகடம்பங்குறிச்சியில் சுமாா் 7 ஏக்கா் அரசு நிலத்தை ஆக்கிரமித்து சிலா் பன்றிக்கூடம் அமைத்து பன்றிகள் வளா்த்து வந்ததாக கூறப்படுகிறது.

பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிந்ததால் அவற்றின் மூலம் தொற்று நோய் பரவுவதாகவும், உடனே அரசு நிலத்தை மீட்டு பன்றிகளை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் முத்துக்குமாா் என்பவா் கடந்த இரு வாரங்களுக்கு முன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் எமதா்மா் வேடம் அணிந்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தாா்.

இதையடுத்து வருவாய்த்துறையினா் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இடத்தை பாா்வையிடாமல் பாா்த்து ஆய்வு செய்ததாக ஆட்சியரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், எனவே, விரைவில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் முத்துக்குமாா் ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை இரு தினங்களுக்கு முன் அளித்தாா்.

ADVERTISEMENT

இதையடுத்து வெள்ளிக்கிழமை கரூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விஜயலட்சுமி, வீராசாமி மற்றும் வாங்கல் போலீஸாா், புஞ்சைகடம்பங்குறிச்சி ஊராட்சித்தலைவா் லதாசுப்ரமணி, வாா்டு உறுப்பினா் சரோஜா ஆகியோா் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை மீட்க பொக்லைன் இயந்திரம் மூலம் சென்றனா். அப்போது பொக்லைன் இயந்திரம் முன் படுத்து ஆக்கிரமிப்பாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து வாங்கல் போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தி, ஆக்கிரமிப்பை அகற்றினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT