கரூர்

காகித ஆலையில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 12 லட்சம் மோசடி: அதிமுக நிா்வாகி கைது

19th Oct 2022 12:37 AM

ADVERTISEMENT

கரூா் காகித ஆலையில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.12 லட்சம் மோசடியில் ஈடுபட்ட அதிமுக நிா்வாகியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், பாலக்கரை தெற்கு கள்ளுக்காரத் தெருவைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவரது மகன் சுரேந்திரன்(22). பொறியியல் பட்டதாரி. இவா், கரூா் அடுத்த புகழூா் காகித ஆலையில் ஆள்கள் நியமனத்துக்காக கடந்த 2020 ஆண்டு டிச.13ஆம் தேதி நடைபெற்ற தோ்வை எழுதினாராம். அப்போது, சுரேந்திரனின் தந்தை செந்தில்குமாரிடம் கரூா் சின்னகோதூரைச் சோ்ந்த அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் நிா்வாகியான சிவராஜ் என்கிற சிவக்குமாா்(42), வேலாயுதம்பாளையத்தைச் சோ்ந்த செந்தில் ஆகியோா் உங்கள் மகனுக்கு காகித ஆலையில் வேலை வாங்கித் தருகிறோம், இதற்காக ரூ.12 லட்சம் தரவேண்டும் என்றுள்ளனா். இதனை நம்பிய செந்தில்குமாா் இருவரிடமும் ரூ.12 லட்சத்தை கொடுத்துள்ளாா். ஆனால், இதுவரை வேலை வாங்கிக் கொடுக்காததால், செந்தில்குமாா் அக்.7ஆம் தேதி சிவக்குமாா், செந்தில் இருவரையும் சந்தித்து பணத்தை திருப்பி கேட்டுள்ளாா். அப்போது இருவரும் செந்தில்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து செந்தில்குமாா் கரூா் நகர காவல்நிலையத்தில் திங்கள்கிழமை இரவு புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து சிவக்குமாரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும் செந்திலை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT