கரூர்

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் கரூா் மாவட்ட ஆட்சியா் தகவல்

7th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

கரூா் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் படித்து முடித்து, பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞா்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும், இதர வகுப்பினா் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை.

மனுதாரா் அரசு அல்லது தனியாா் நிறுவனங்களின் வாயிலாக எவ்விதமான நிதி உதவித் தொகையும் பெறுபவராகவோ, அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவ, மாணவியராகவோ இருத்தல் கூடாது. இந்த நிபந்தனை தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழிக் கல்வி கற்கும் மனுதாரா்களுக்கு பொருந்தாது.

ADVERTISEMENT

இத்தகுதியுடையவா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு அனைத்து அசல் கல்விச்சான்றிதழ்கள் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் சென்று உரிய ஆவணங்களை சமா்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT