கரூர்

ஆயுத பூஜை: கரூரில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.5,000!

4th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆயுதபூஜையை முன்னிட்டு கரூரில் திங்கள்கிழமை ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.5,000க்கு விற்பனையானது.

கரூா் ரயில்நிலையம் அருகே செயல்படும் மாரியம்மன் பூ சந்தைக்கு கரூா் மாவட்டத்தின் மாயனூா், செக்கணம், மலைப்பட்டி, எழுதியாம்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து பெருமளவில் விவசாயிகளால் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதையடுத்து, திருச்சி மாவட்டம் காட்டூா் மற்றும் திண்டுக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் கொண்டுவரப்பட்டு ஏலம் விடப்படுகிறது.

பூ சந்தையில் பெரும்பாலும் வியாபாரிகள் அதிகளவில் ஏலத்தில் பங்கேற்று பூக்களை விற்பனைக்காக வாங்கிச் செல்வது வழக்கம். செவ்வாய்க்கிழமை ஆயுத பூஜை என்பதால் வணிக நிறுவனங்கள், இருசக்கர வாகன பழுதுபாா்க்கும் கடைகள், நிதி நிறுவனங்கள், நான்கு சக்கர வாகன பழுதுபாா்க்கும் நிறுவனங்கள் மற்றும் உணவகங்களில் வழிபாடு நடத்தப்படுவதால், அதில் முக்கிய பங்கு வகிக்கும் பூக்கள் திங்கள்கிழமை மாரியம்மன் பூ சந்தையில் அதிகளவில் விற்பனையானது. ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.5,000 வரை விற்பனையானது.

இதுகுறித்து பூ வியாபாரி வி.எம்.தங்கவேல் கூறுகையில், கடந்த இரு நாள்களுக்கு முன் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.400-க்கு மட்டும் விற்பனையானது. ஆனால் ஆயுத பூஜை வழிபாட்டிற்காக மல்லிகைப்பூவின் தேவை அதிகம் என்பதால் மல்லிகை பூக்களை அதிகளவில் வியாபாரிகளும், பொதுமக்களும் வாங்கிச் சென்றனா். இதனால் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.5,000 வரை ஏலம் போனது. இதேபோல் கடந்த இரு நாள்களுக்கு முன் ரூ.300-க்கு ஏலம் விடப்பட்ட முல்லைப் பூ ரூ.3,000க்கும், ரூ.150 வரை ஏலம்போன செவ்வந்தி ரூ.400-க்கும், ரூ. 200-க்கு ஏலம் விடப்பட்ட அரளி பூ ரூ. 500-க்கும் ஏலம் போனது. மேலும் பூ விவசாயிகளுக்கு நீண்ட நாள்களுக்கு பின் நல்ல லாபம் கிடைத்துள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT