கரூர்

கரூரில் ஆயுதபூஜை பொருள்கள் விற்பனை தீவிரம்

4th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

கரூரில் திங்கள்கிழமை ஆயுத பூஜை பொருள்களின் விற்பனை தீவிரமாக நடைபெற்றது.

ஆயுதபூஜையை முன்னிட்டு தொழில் நிறுவனங்களில் நடத்தப்படும் பூஜை பொருள்களில் ஒன்றான வாழைக்கன்றுகள், வாழைப்பழம் போன்றவை கரூா் மாவட்டத்தின் சித்தலவாய், கிருஷ்ணராயபுரம், மாயனூா் உள்ளிட்ட பகுதிகளில் நேரிடையாக விவசாயிகளால் கொண்டுவரப்பட்டு கரூா் லைட்ஹவுஸ்காா்னா், கோவைச்சாலை, ஜவஹா்பஜாா், உழவா்சந்தை ஆகிய பகுதிகளில் விற்பனையில் ஈடுபட்டனா். ஆனால் கடந்தாண்டை விட அவற்றின் விலை இரு மடங்காக காணப்பட்டது. கடந்த ஆண்டு ரூ.30-க்கு விற்ற ஒரு ஜோடி வாழைக்கன்றுகள் திங்கள்கிழமை ரூ.60-க்கும், ரூ. 30-க்கு விற்ற வாழைப்பழம் ஒரு சீப் ரூ.80க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல பூஜை பொருள்களான ஆப்பிள் கிலோ ரூ.100, 150-க்கும், சாத்துக்குடி ரூ.80-க்கும், தேங்காய் ரூ.15 முதல் ரூ.25 வரையிலும், பொரி ஒரு பக்கா ரூ.20 எனவும், 2 கிலோ எடைகொண்ட திருஷ்டி வெள்ளை பூசனி ரூ.50-க்கும் விற்கப்பட்டது. மேலும், தோரண தென்னைமர ஓலைகள் ஜோடி ரூ.10-க்கும், மாவிலைகள் கொத்து ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டன. பூஜை பொருள்கள் விற்பனையால் கரூரில் திங்கள்கிழமை பிற்பகல் முதல் இரவு வரை கூட்டநெரிசல் காணப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT