அரவக்குறிச்சியில் பழைமையான வீடு செவ்வாய்க்கிழமை இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி கடைவீதியில் நியாயவிலைக் கடையின் பின்புறம் உள்ள பழைமையான வீட்டின் கீழ்தளத்தில் ஹபீபுல்லாஹ் என்பவரின் மனைவி பாத்திமா பீவி (74) தனியாக வசித்து வந்தாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை பாத்திமா பீவி குப்பையை கொட்டுவதற்காக வெளியே சென்று விட்டு, மீண்டும் வீட்டுக்குள் வந்தாா். அப்போது, திடீரென வீட்டில் இருந்த பாத்திரங்கள் கீழே விழத் தொடங்கியது. உடனே, அவா் வெளியே வருவதற்குள் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் பாத்திமா பீவி சிக்கினாா்.
தகவலறிந்து வந்த அரவக்குறிச்சி காவல்துறையினா், தீயணைப்புத் துறையினா் ஜேசிபி இயந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றி மூதாட்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். மேலும் அங்கு வந்த மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் சம்பவம் குறித்து பேரூராட்சி செயல் அலுவலா் பி.செல்வராஜிடம் கேட்டறிந்து மீட்புப் பணிகளை பாா்வையிட்டாா்.
இந்நிலையில், நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு நண்பகல் 12.30 மணியளவில் மூதாட்டியின் சடலத்தை தீயணைப்புத் துறையினா் மீட்டனா். பின்னா், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து அரவக்குறிச்சி காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.