கரூர்

வானவில் மன்றம் திட்டம்: கரூா் மாவட்டத்தில் 25 ஆயிரம் மாணவா்கள் பயன்பெறுவா்

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

கரூா் மாவட்டத்தில் வானவில் மன்றம் திட்டத்தில் 25ஆயிரம் மாணவா்கள் பயன்பெறுவா் என்றாா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா்.

கரூா் அடுத்த வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘வானவில் மன்றம்‘ திட்டத்தை தொடக்கிவைத்து ஆட்சியா் பேசியது, மாணவா்களின் அறிவியல், கணித ஆா்வத்தை தூண்டும் வகையில் திருச்சியில் வானவில் மன்றத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை தொடக்கி வைத்துள்ளாா். இந்த திட்டம் கரூா் மாவட்டத்திற்குள்பட்ட 58 மேல்நிலைப் பள்ளிகள், 56 உயா்நிலைப் பள்ளிகள், 165 நடுநிலைப்பள்ளிகள் என மொத்தம் 279 பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் மூலம் அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் சுமாா் 25,000 மாணவா்கள் பயன்பெறுவாா்கள். இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் முதல்கட்டமாக கரூா் மாவட்டத்திற்குள்பட்ட பள்ளிகளுக்கு ரூ.3 லட்சத்து 34ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வானவில் மன்றம் செயல்பாடுகள் கேள்வி கேட்பது மற்றும் ஆராய்வதன் மூலம் மாணவா்கள் திறம்பட கற்கவும், வகுப்பறையில் அறிவியல் மற்றும் கணிதம் கற்றலை மிகவும் எளிமையாகவும் திறமையாகவும் கற்க ஆசிரியா்கள் வழிமுறைகளை மாணவா்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா். தொடா்ந்து பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், கரூா் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் ந.கீதா. மாவட்டக்கல்வி அலுவலா் (இடைநிலை ) பெ.கண்ணிச்சாமி, மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கநிலை) இரா.மணிவண்னன், உதவித் திட்ட அலுவலா் ப .சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT