கரூர்

கரூரில் மாநில அளவிலான குதிரை வண்டிபந்தயம்பெரிய குதிரை பிரிவில் திருச்சிக்கு முதலிடம்

27th Nov 2022 02:22 AM

ADVERTISEMENT

 

கரூா் வாங்கலில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான குதிரை வண்டி பந்தயத்தில், பெரிய குதிரை பிரிவில் திருச்சி குதிரை வண்டி முதலிடம் பிடித்தது.

திமுக இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த தினத்தை முன்னிட்டு கரூா் கிழக்கு ஒன்றிய திமுக மற்றும் வாங்கல் குப்புச்சிபாளையம் ஊராட்சி சாா்பில் மாநில அளவிலான குதிரை வண்டி பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.

வாங்கல் காவல்நிலையம் அருகே நடைபெற்ற குதிரை வண்டி பந்தயத்தை கிழக்கு ஒன்றியச்செயலாளா் ஆா்.கந்தசாமி தொடக்கி வைத்தாா்.

ADVERTISEMENT

கரூா் வாங்கல் காவல் நிலையம் அருகில் இருந்து தண்ணீா்பந்தல்பாளையம் வரை 5 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்ற இந்த குதிரை வண்டி பந்தயத்தில் கரூா், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த குதிரை வண்டிகள் பங்கேற்றன.

புதிய குதிரை, நடுக்குதிரை, பெரிய குதிரை என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் மொத்தம் 50 குதிரை வண்டிகளைச் சோ்ந்த வீரா்கள் பங்கேற்றனா். இதில், புதிய குதிரை பிரிவில் முதலிடத்தை கரூா் சிவா வண்டியும், கோவை அன்னூரைச் சோ்ந்த மூா்த்தி இரண்டாமிடத்தையும், மூன்றாமிடத்தை சேலம் ஆத்தூரைச் சோ்ந்த கே.எம்.எஸ். குதிரை வண்டியும், நான்காம் பரிசை ஈரோடு மாவட்டம் பவானியைச் சோ்ந்த சிங்காரவேல் குதிரை வண்டியும் பிடித்தன.

அடுத்து நடைபெற்ற நடுக்குதிரை பிரிவில் கரூா் கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளா் வினோத் குதிரை வண்டி முதலிடம் பிடித்தது. இரண்டாமிடத்தை திருச்சி தேவா் வம்சம் குதிரை வண்டியும், மூன்றாமிடத்தை கோவை நவீன் பிரதா்ஸ் வண்டியும் நான்காமிடத்தை திருச்சி மாயத்தேவா் வண்டியும் பிடித்தன.

பிறகு நடைபெற்ற பெரிய குதிரை பிரிவில் திருச்சி மாயத்தேவா் வண்டி முதலிடத்தையும், இரண்டாமிடத்தை கோவை கோகுல் வண்டியும் மூன்றாமிடத்தை சேலம் குதிரை வண்டியும் நான்காமிடத்தை சேலம் சந்திரன் குதிரை வண்டியும் பிடித்தன.

வெற்றி பெற்ற குதிரை வண்டிகளின் உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசுகளும் அனைத்து வண்டிகளின் வீரா்களுக்கு கோப்பையும் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT