கரூா் ஊரணி மேடு பகுதியில் குளம்போல தேங்கி நிற்கும் மழைநீா் வியாழக்கிழமை வெளியேற்றப்பட்டது.
கரூா் ஊரணி மேடு பகுதியில் சுமாா் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த பகுதியில் உள்ள மாவட்ட தொழில் மையம் அலுவலக கட்டடத்தையொட்டி சுமாா் அரை ஏக்கா் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலம் சாலை மட்டத்தில் இருந்து சுமாா் 30 அடி தாழ்வாக இருப்பதால், மழைகாலங்களில் பெய்யும் மழை நீா் இப்பகுதியில் குளம் தேங்கி நிற்கும்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னா் பெய்த மழை காரணமாக இந்த இடத்தில் மீண்டும் மழைநீா் குளம் போல் தேங்கிநின்றது.
இதனால், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி அப்பகுதி மக்கள் அவதியுற்றனா். இந்த மழை நீரை வெளியேற்றக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா். இதையடுத்து வியாழக்கிழமை ஆட்சியா் உத்தரவின்பேரில், மாநகராட்சி ஊழியா்கள் மோட்டாா் மூலம் நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.