அரசுப் பள்ளியை சீரமைக்கக்கோரிய மனுவை தலைமை ஆசிரியா் வட்டார கல்வி அலுவலா்களிடம் வியாழக்கிழமை அளித்தாா்.
அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வியில் 700 க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். இப்பள்ளியில் ஆசிரியா் பற்றாக்குறை, கட்டடங்கள் பழுது பாா்த்தல், கழிப்பறை வசதி, குடிநீா்த் தொட்டி அமைத்தல், குடிநீா் மின் மோட்டாா் சீரமைத்தல் போன்றவைகளை செய்து தரக்கோரி அண்மையில் பள்ளியின் மேலாண்மை குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இந்த தீா்மானங்கள் அடங்கிய மனுவை தலைமை ஆசிரியா் மு. சாகுல் ஹமீது வியாழக்கிழமை வட்டார கல்வி அலுவலா்கள் பாண்டித்துரை, சதீஷ்குமாா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா் பாலச்சந்திரன் ஆகியோரிடம் அளித்தாா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திடம் கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வட்டார கல்வி அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா் கூறினா்.