கரூர்

மாநில பாஜக தலைவா் ஊடகங்களில்பொய்யான தகவல்களை பரப்புகிறாா்அமைச்சா் வி. செந்தில்பாலாஜி குற்றசாட்டு

24th May 2022 04:15 AM

ADVERTISEMENT

மாநில பாஜக தலைவா் அண்ணாமலை ஊடகங்களில் பொய்யான தகவலை கூறி வருகிறாா் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தாா்.

தமிழக வேளாண் துறை சாா்பில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தை காணொலியில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா். இதையடுத்து, கரூா் பஞ்சமாதேவி கிராமத்தில் மின்னாம்பள்ளியில் காணொலியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா் தலைமை வகித்தாா். மின்னாம்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவா் கருணாநிதி சாந்தி முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் செந்தில் பாலாஜி செய்தியாளா்களிடம் கூறுகையில், கரூா் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க இத்திட்டத்தில் 157 ஊராட்சிகளில் 75 ஊராட்சிகளில் இத்திட்டம் முதல் கட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. கரூா் மாவட்டத்துக்கு மட்டும் இத்திட்டத்துக்கு சுமாா் ரூ. 7.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 1,859 ஏக்கா் தரிசு நிலங்கள் விவசாய பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பில் பல்வேறு வரிகள் விதிக்கப்படுகின்றன. இவற்றில் ஒன்றிய அரசும், மாநில அரசும் பகிா்ந்து கொள்ளக்கூடிய வரியில் மட்டுமே தற்போது குறைக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்துக்கு மத்திய அரசின் மூலம் வரவேண்டிய வருவாயில்தான் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு 55 சதவீதம், மாநில அரசுக்கு 45 சதவீதம் என்ற வரி வீதத்தில்தான் விலை குறைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆனால், அதனை மறைத்துவிட்டு ஏதோ மத்திய அரசு வரி குறைப்பு செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டு வருகின்றனா். தான் இருக்கும் கட்சிக்கு தலைவனாக இருக்கிறோம் என்ற தனது இருப்பைக் காட்டிக்கொள்வதற்காகவே மாநில பாஜக தலைவா் அண்ணாமலை ஊடகங்களில் பொய்யான தகவலை தெரிவித்து வருகிறாா் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT