தலைக்கவசமின்றி இரு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப வரும் போது, அந்த விற்பனை நிலைய ஊழியா்களிடம் தகராறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் கரூா் ஆட்சியா் த. பிரபுசங்கா்.
கரூா் மாவட்டத்திலுள்ள பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளா்களுடனான ஆலோசனை, கருத்துக் கேட்புக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, ஆட்சியா் பேசியது:
தலைக்கவசம் இல்லாமல் இருசக்கர வாகனங்களை அதிகளவில் இயக்குவதால்தான், கரூா் மாவட்டத்தில் சாலை விபத்துக்கள் மூலம் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதைத் தடுக்கும் வகையில் அரசு அலுவலகங்களுக்கும், நியாயவிலைக் கடைகளுக்கும், டாஸ்மாக், பெட்ரோல்
விற்பனை நிலையங்களுக்கும் தலைக்கவசம் இல்லாமல் வரும் இரு சக்கர வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவது இல்லை, சேவைகள் செய்வது இல்லை என்று முடிவெடுக்கப்பட்டு, கடந்த மாதத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தொடக்கத்தில் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் பெட்ரோல் நிலையங்களுக்கு வந்தவா்களுக்கு பெட்ரோல் நிரப்ப மறுத்ததால், இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து வாகனங்களை ஓட்டினாா்கள். ஆனால் தற்போது அந்த நிலை இல்லை.
மாவட்டத்தில் 120 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளன.
அங்கு தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வருபவா்களுக்கு பெட்ரோல் நிரப்ப மறுக்கும் போது, ஏதாவது பிரச்னைகள் ஏற்பட்டால், கட்செவி அஞ்சல் குழுவின் வழியாக ததவல் அனுப்பினால், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டி மீது காவல்துறை மூலம் வழக்குப்பதியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் ஆட்சியா்.
கூட்டத்துக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ப. சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் லியாகத், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தண்டாயுதபாணி, சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் சைபுதீன்,
ஆட்சியா் அலுவலக மேலாளா் (குற்றவியல்) சந்திரசேகா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.