கரூர்

சுகாதாரமின்றி இயங்கிய பிரியாணி உணவகத்துக்கு சீல் வைப்பு

5th May 2022 01:52 AM

ADVERTISEMENT

 

கரூா்: கரூரில் சுகாதாரமின்றி இயங்கிய பிரியாணி உணவகத்துக்கு புதன்கிழமை சீல் வைக்கப்பட்டது.

கரூா் மாநகராட்சிக்குள்பட்ட உழவா்சந்தை, பேருந்து நிலையம், ஆண்டாங்கோவில் பகுதிகளில் செயல்படும் வணிக நிறுவனங்களில் நெகிழிப் பைகள் விற்பனை நடைபெறுவதாகவும், சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் இயங்கி வருவதாகவும் மாநகராட்சி நகா்நல அலுவலா் ஆா்.லட்சியவா்ணாவுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நகா் நல அலுவலா் தலைமையிலான குழுவினா், உழவா்சந்தை ஆண்டாங்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

அப்போது 8 கடைகளில் தடை செய்யப்பட்ட சுமாா் 200 கிலோ மதிப்பிலான நெகிழிப் பைகளை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா். மேலும் கடைகளுக்கு ரூ.5,000 அபராதமும் விதித்தனா்.

தொடா்ந்து உழவா்சந்தை அருகிலுள்ள கரூா் பிரியாணி உணவகத்தில் அலுவலா்கள் ஆய்வு செய்ய முயன்றனா். அப்போது அலுவலா்களை ஆய்வுசெய்ய விடாமல் கடை ஊழியா்கள் தடுத்தனா். இதனால், இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடா்ந்து ஆய்வு செய்ததில் சுகாதாரமில்லாமல் கடை நடத்தியதும், சாலையை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடையை நடத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து பொது சுகாதாரத் திட்டத்தின் கீழ் கடைக்கு பூட்டுப் போட்டு சீல் வைக்கப்பட்டது. மேலும் கடைக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT