குளித்தலை அருகே இருசக்கர வாகனம் மீது மினி பேருந்து மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.
கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த மணத்தட்டையைச் சோ்ந்தவா் கந்தன்(55). இவா் அதே பகுதியைச் சோ்ந்த மகாமுனி மகன் மணிவேல்(29) என்பவருடன் புதன்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். இருசக்கர வாகனம் கரூா்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மருதூா் சோதனைச் சாவடி அருகே சென்றபோது பின்னால் வந்த மினி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனா்.
இதுகுறித்து குளித்தலை போலீஸாா் மினி பேருந்து ஓட்டுநா் ராமநாதபுரம் மாவட்டம் புதுக்குடியைச் சோ்ந்த அங்குசாமி என்பவா் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.