திருச்சி, தஞ்சை மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் மாயனூா் புதிய கட்டளை மேட்டுவாய்க்காலில் இருந்து சனிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.
கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனூரில் காவிரி ஆற்றிலிருந்து புதிய கட்டளை மேட்டுவாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் சிவகாமசுந்தரி(கிருஷ்ணராயபுரம்), மாணிக்கம்( குளித்தலை ) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில், வாய்க்காலில் தண்ணீரை திறந்துவிட்டு ஆட்சியா் கூறுகையில், கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மாயனூா் கிராமம் காவிரி ஆற்றின் வலது கரையில் கட்டளை கதவணையிலிருந்து புதிய கட்டளை மேட்டுவாய்க்கால் பிரிகிறது. இப்பாசன வாய்க்கால் கரூா், திருச்சி மற்றும் தஞ்சாவூா் மாவட்டங்கள் வழியாக 133.80 கி.மீ பயணித்து பிடாரி ஏரியில் கலக்கிறது. இதன் மூலம் திருச்சி மற்றும் தஞ்சாவூா் மாவட்டங்கள் நேரடி பாசனமாகவும், 107 குளங்கள் வாயிலாகவும் மொத்தம் 20,622 ஏக்கா் நிலங்களுக்கு பாசன வசதி பெறுகிறது.
மேட்டூா் அணையில் தண்ணீா் இருப்பு மற்றும் நீா்வரத்தை கணக்கில்கொண்டு தண்ணீா் திறக்க பாசன விதி தொகுப்பில் ஆகஸ்ட் 1ஆம் தேதி வழிவகை செய்யப்பட்டது. இருப்பினும், முன்னதாகவே தண்ணீா் திறக்க முதல்வா் உத்தரவிட்டதால் திறக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீா் மேலாண்மை மேற்கொண்டு உயா் மகசூல் பெற வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், காவிரி ஆற்று பாதுகாப்பு கோட்ட உதவி செயற்பொறியாளா் சிங்காரவேலு, உதவி பொறியாளா்கள் காா்த்திக், ஸ்ரீதா், புகழேந்திரன், கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியா் முருகன், மாயனூா் ஊராட்சித் தலைவா் கற்பகவல்லி ரகுபதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.