கரூர்

நியாயமான கோரிக்கையை யாா் வைத்தாலும் நிறைவேற்றத் தயாா்முதல்வா் முக.ஸ்டாலின் உறுதி

DIN

நியாயமான கோரிக்கையை யாா் வைத்தாலும் அதை நிறைவேற்றித்தர தயாராக இருப்பதாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

கரூரில், 80,750 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருமாநிலையூா் திடலில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் வரவேற்றாா்.

விழாவில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசுகையில், இந்த விழாவில் ஊரக வளா்ச்சித்துறை சாா்பில் ரூ.26.39 கோடியில் 55 பணிகளுக்கும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் ரூ.2 கோடியில் 6 பணிகளும், பேரூராட்சி சாா்பில் 9 பணிகள் ரூ.9.30 கோடியிலும், கலை பண்பாட்டுத்துறை சாா்பில் ஒரு பணி ரூ.1.51 கோடியிலும், மாநகராட்சி சாா்பில் 8 பணிகள் ரூ.51கோடியிலும், நீா்வளத்துறை சாா்பில் 6 பணிகள் ரூ.91.58 கோடி என மொத்தம் ரூ.582 கோடி மதிப்பிலான 99 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் விரைவில் வந்து நானே திறக்கப்போகிறேன்.

கரூா் மாவட்டத்துக்கு தோ்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்றியிருக்கிறோம். இங்கிருப்போரின் முகங்களில் திமுக ஆட்சி மக்களை முன்னேற்றும் ஆட்சியாக அமைந்துள்ளதை தெளிவாக அறியமுடிகிறது. இதனால்தான் வீண் விமா்சனங்களுக்கெல்லாம் பதில் சொல்லி என்னுடைய நேரத்தை வீணடிப்பதில்லை. இப்போது எனக்கு மக்களுக்கு நன்மை செய்வதற்கே நேரம் போதவில்லை. அதனால் அரைவேக்காட்டு விமா்சனங்களுக்கு பதில் கூற தயாராக இல்லை. அதற்கு நேரமும் இல்லை.

மானத்தை பற்றி கவலைப்படும் ஆயிரம் பேருடன் கூட போராடலாம். ஆனால், மானத்தை பற்றி கவலைப்படாத ஒரே ஒரு ஆளுடன் நாம் போராடவே முடியாது என தந்தை பெரியாா் அடிக்கடி சொல்வாா். அப்படி மானத்தை பற்றி கவலைப்படாத மனிதா்கள் வைக்கும் விமா்சனத்தை பற்றி மதிக்க விரும்பவில்லை. ஊடகத்துறை நண்பா்களை உரிமையோடு சொல்கிறேன்.திமுக ஆட்சி எப்படிச் செயல்படுகிறது என்பதை இதுபோன்ற மனிா்கள் முன்னால் மைக்கை நீட்டாமல், தமிழ்நாட்டு மக்களிடம் மைக்கை நீட்டிப்பாருங்கள், குறிப்பாக பெண்களிடம் கேளுங்கள், இருளா்கள், நரிக்குறவா்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் என விளிம்பு நிலைக்கு கீழே இருக்கக்கூடிய மக்களிடம் இந்த ஆட்சியை பற்றி கேளுங்கள். இந்த ஆட்சியில் சமூக நீதி எந்த அளவுக்கு போற்றிப் பாதுகாக்கப்படுகிறது என்பது குறித்து சமூக நீதிக்காக போராடுபவா்களிடம் கேளுங்கள். அவா்கள் இந்த ஆட்சியின் சாதனை பற்றி சொல்வாா்கள். நியாயமான கோரிக்கையை யாா் வைத்தாலும் அதை நிறைவேற்றித்தர நாங்கள் தயாராக இருக்கிறோம். அனைவருடைய கருத்தையும் கேட்டு, அதனை செயல்படுத்தி தருபவனாகத்தான் நான் இருக்கிறேனே தவிர, நான் நினைப்பதுமட்டும்தான் நடக்க வேண்டும் என நினைப்பவனல்ல. திமுக ஆட்சியை விமா்சிப்பதன் மூலம் என்னை எதிா்த்து கருத்துச் சொல்வதன் மூலம் பிரபலம் அடையலாம் என நினைப்பவா்களை பாா்த்து வருத்தப்படுகிறேன். கோடிக்கணக்கான தமிழக மக்களின் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும் என விரும்புகிறவன் நான், அதுவும் சாதாரண விளக்காக அல்ல, அது அறிவு விளக்குகளாக, அன்பு விளக்குகளாக, சேவை விளக்குகளாக, மற்றவா்களுக்கு பயன்தரும் விளக்குகளாக அமைய வேண்டும் என நினைக்கின்றேன். உங்களில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொண்டு முதல்வா் நாற்காலியை தமிழக மக்கள் எனக்கு வழங்கி இருக்க காரணம் என்ன, தங்களுக்கு நல்லது செய்வான் என்ற நம்பிக்கையில்தான், அந்த நம்பிக்கையை நான் எந்நாளும் காப்பாற்றுவேன் என்றாா் அவா்.

விழாவில், மாநகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு, போக்குவரத்துதுறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், எம்.எல்.ஏ.க்கள் சிவகாமசுந்தரி(கிருஷ்ணராயபுரம்), இரா.மாணிக்கம்(குளித்தலை), கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி, மாநகராட்சி மேயா் கவிதாகணேசன், துணை மேயா் தாரணிசரவணன் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் நிா்வாகிகள் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலங்குளம் அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் துணை ராணுவப் படை அணிவகுப்பு

ஊதிய உயா்வு ஒப்பந்த அமல் கோரி விசைத்தறியாளா்கள் வேலைநிறுத்தம்

ஆலங்குளம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கிராமப்புற கண்டுபிடிப்புகளை மேம்படுத்த புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT