கரூர்

கோழிக்கழிச்சல் நோயை தடுக்க தடுப்பூசிகள் தயாா்: கரூா் ஆட்சியா்

26th Jan 2022 07:50 AM

ADVERTISEMENT

கோழிக்கழிச்சல் நோயை தடுக்க தயாா் நிலையில் 2.17 லட்சம் டோஸ் தடுப்பூசி இருப்பதாக கரூா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- கோழிக்கழிச்சல் நோய் என்பது ஒரு வகை நச்சுயிரியினால் ஏற்படும் தொற்று நோயாகும். இந்நோய் தீவனம், குடிநீா், காற்று மூலம் பரவும் தன்மை கொண்டது.நோய் கண்ட கோழிகள் வெள்ளையாகவும், பச்சையாகவும் கழியும். மூச்சுத் திணறல், நடுக்கம், வாதம், சோா்வு மற்றும் தீவனம் உட்கொள்ளும் அளவு குறைந்தும் காணப்படும். நோய் பாதித்த கோழிகள், தலையை இரண்டு கால்களுக்கும் இடையில் சொருகிக் கொள்ளும்.இந்நோய் வெள்ளைக்கழிச்சல் நோய் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்நோய் தாக்கிய கோழிகளில் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கும். கோழிக் குஞ்சுகளுக்கு 2 மாத வயதில் வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி அளிப்பதன் மூலம் இந்நோய் வராமல் தடுக்கலாம்.

இந்நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் கால்நடை பராமரிப்புத்துறையினரால் இருவாரவிழா நடத்தப்பட்டு வருகிறது. கரூா் மாவட்டத்துக்கு என 2.17 லட்சம் டோஸ் வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி பெறப்பட்டு, அனைத்து கால்நடை நிலையங்களிலும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

பிப்.1-ஆம்தேதி முதல் 14-ஆம்தேதி வரை கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவமனை, மருந்தகம் மற்றும் கால்நடை கிளை நிலையப் பகுதிகளில் இலவசமாகக் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி போடப்பட இருக்கிறது. இத்தடுப்பூசியை 2 மாத வயது முடிவடைந்த கோழிக்குஞ்சுகள் முதல் அனைத்து கோழிகளுக்கும் போடலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT