அரவக்குறிச்சி பகுதியில் கடும் பனிப் பொழிவின் காரணமாக வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகளும், விவசாயிகளும் அவதிக்குள்ளாகினா்.
தமிழகத்தில் டிசம்பா் மாதம் இறுதியில் தொடங்கி ஜனவரி மாதம் முழுவதும் குளிா்காலம் நிலவும். குறிப்பாக, அதிகாலை நேரத்தில் அதிக குளிரால் பனி மூட்டம் ஏற்படுவது வழக்கம். ஆனால், தமிழகத்தில் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக கடும் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. மழை நின்றாலும் பனிப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
கடந்த சில தினங்களாக தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மாலையில் தொடங்கும் பனி மூட்டம் இரவிலும், அதிகாலை வரை நீடிக்கிறது.
அரவக்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை வழக்கத்தைவிட அதிக அளவில் பனிப்பொழிவு இருந்தது. இதனால் முக்கிய சாலைகளில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனா். மேலும் தைப்பூச திருவிழாவிற்காக பழனிக்கு பாத யாத்திரை செல்லும் பக்தா்கள் அதிக கவனமுடன் நடந்து செல்கின்றனா். விவசாயிகள் நடவு பணிகளை முடித்து இரு மாதங்களாகியும் பயிா்கள் உரிய வளா்ச்சி பெறவில்லை. டிசம்பா், ஜனவரியில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக பனிப்பொழிவு பெய்வது தான் காரணம் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா். பனிப்பொழிவு தொடா்ந்தால் நெற்கதிா்கள் கருகும். விளைச்சல் குறையும் எனவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.