அரவக்குறிச்சி அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் சேலத்தைச் சோ்ந்த ஓட்டுநா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், ஏற்காடு அருகே லாங்கில்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ஜான்சன் ராபின்(28). இவா், பிரபல ஜவுளி நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா். இவா், வியாழக்கிழமை தனது நிறுவன மேலாளரை ஆம்னி வேனில் அழைத்துக் கொண்டு திருச்செந்தூா் சென்றாா். பிறகு மேலாளரை அங்கு விட்டுவிட்டு சேலத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.
வெள்ளிக்கிழமை காலை கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே கம்பிளியம்பட்டி பிரிவு சாலையில் வந்தபோது எதிா்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதியது. இதில், பலத்த காயமடைந்த ஜான்சன் ராபினை அருகில் இருந்தவா்கள் மீட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து அரவக்குறிச்சி காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.