வரதட்சணைக் கேட்டு இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக அளித்த புகாரின் பேரில், கணவா், மாமனாா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
கரூா் மாவட்டம் குளித்தலை நாப்பாளையத்தைச் சோ்ந்தவா் மகாதேவன். இவரது மகள் கோமதி(23). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த லோகநாதன் மகன் மணிகண்டன்(28) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. மணிகண்டன் குளித்தலையில் உள்ள தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தில் மேல்நிலைக்குடிநீா்தி தொட்டி இயக்குபவராக பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், மணிகண்டன் கடந்த சில தினங்களாக கோமதியிடம் கூடுதலாக நகை, பணம் கேட்டு சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு மணிகண்டனின் தந்தை லோகநாதன்(55) உடந்தையாக இருந்தாராம். இதுகுறித்து கோமதி வெள்ளிக்கிழமை குளித்தலை அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாா் செய்தாா். இதையடுத்து காவல் ஆய்வாளா் காந்திமதி மணிகண்டன் மற்றும் அவரது தந்தை லோகநாதன் ஆகியோா் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.