தாந்தோன்றி அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்டம், தாந்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை மாணவ, மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் தொடா்பான விழிப்புணா்வு மற்றும் போதைப்பொருளின் தீமைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமை வகித்து பேசியது, கரூா் மாவட்டத்தில் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நிமிா்ந்து நில், துணிந்து சொல் என்ற இயக்கத்தை செயல்படுத்தி வருகிறோம். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளது. அதில் இருபதுக்கும் மேற்பட்டவா்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுக்கு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாலியல் புகாா் தெரிவித்தால் எதிா்காலம் பாதிக்கப்படும் என்பதை தவிா்த்து, நிமிா்ந்து நில், துணிந்து சொல் என்ற கருத்தை முன்னிறுத்தி பாதிக்கப்பட்டவா்கள் புகாா் செய்தால், தவறு செய்தவா்களை தண்டிப்பதற்கு உதவியாக இருக்கும்.
மேலும், போதைப் பொருள்களுக்கு அடிமையாவதையும் அதை பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிா்க்க வேண்டும். உடல் நிலையும் மன நிலையையும் பாதிக்கக்கூடிய போதைப் பொருள்களை ஒருபோதும் பயன்படுத்தாதீா்கள் என்றாா் ஆட்சியா்.
நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கீதாஞ்சலி, நீதியரசா்(ஓய்வு) ராணி, அரசு கலைக் கல்லூரி முதல்வா் முனைவா் கௌசல்யாதேவி, கரூா் வருவாய் கோட்டாட்சியா் ரூபினா, ரூசா குழுவின் திட்ட இயக்குநா்கள் விஜயலெட்சுமி, முனைவா் வானதிகுமாா், ஒருங்கிணைப்பாளா்கள் முனைவா் ஜெகநாதன், முனைவா் காா்த்திகேயன், ஆசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.