கரூா் மாவட்டம் திருக்காடுதுறையில் கால்நடை சுகாதார விழிப்புணா்வு மற்றும் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
நொய்யல் கால்நடை மருத்துவமனை சாா்பில் நடைபெற்ற முகாமிற்கு மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநா் சரவணக்குமாா் தலைமை வகித்தாா். கால்நடை பராமரிப்புத்துறை புலனாய்வு பிரிவு உதவி இயக்குநா் லில்லி அருள்குமாரி முன்னிலை வகித்தாா். முகாமில் நொய்யல் கால்நடை மருத்துவமனை மருத்துவா் உஷா தலைமையிலான குழுவினா் கலந்து கொண்டு 400க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளுக்கும், கன்றுக்குட்டிகளுக்கும் தடுப்பூசி மற்றும் சிகிச்சையளித்தனா்.
இந்த சிறப்பு முகாமில் கால்நடைகளை தாக்கும் பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியும், கால்நடைகளை தாக்கும் நோய்கள் குறித்து விழிப்புணா்வும், கால்நடைகளுக்கு புரதம் சத்து நிறைந்த பசுந்தீவன உற்பத்தி குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. சிறந்த கன்றுகளுக்கு பரிசுகளும், சிறந்த கால்நடை விவசாயிகளுக்கு கால்நடை வளா்ப்பில் சிறந்த மேலாண்மை விருதும் வழங்கப்பட்டது.