கரூர்

‘வாய்ப்புகள் மறுக்கப்படும்போதே வெற்றியின் ரகசியம் வெளிப்படும்’

4th Dec 2022 11:13 PM

ADVERTISEMENT

வாய்ப்புகள் மறுக்கப்படும்போதே உங்களுக்கான வெற்றியும் ரகசியம் வெளிப்படும் என்றாா் முன்னாள் அகில இந்திய வானொலி நிகழ்ச்சி இயக்குநரும், தன்னம்பிக்கைப் பேச்சாளருமான முனைவா் சுந்தரஆவுடையப்பன்.

கரூா் மாவட்ட மைய நூலக வாசகா் வட்டம் சாா்பில் 46-ஆவது சிந்தனை முற்றம் நிகழ்ச்சி மற்றும் நூல் வெளியீட்டு விழா கரூா் மாவட்ட மைய நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சென்னை குமரன் பதிப்பகம் மற்றும் பபாசி தலைவா் சா. வைரவன் தலைமை வகித்தாா். மாவட்ட மைய நூலகா் செ.செ. சிவகுமாா் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் முனைவா் சுந்தர ஆவுடையப்பன் எழுதிய மாா்கழிப் பெருமை என்ற நூலை ஆன்மிகச் செம்மல் ம.பிச்சைமுத்து வெளியிட, சமூக ஆா்வலா் கோ. சிவராமன் பெற்றுக் கொண்டாா். முனைவா் அ. கோவிந்தராஜூ நூல் மதிப்புரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் மறுபடியும் பிறப்போம் என்ற தலைப்பில் முனைவா் சுந்தரஆவுடையப்பன் மேலும் பேசியது:

ADVERTISEMENT

கடவுள் அனைவரையும் ஒரே மாதிரிதான் படைத்திருக்கிறாா். இளைஞா்களுக்குத் தனித்தன்மை இல்லை. இதனால் ஏராளமான இளைஞா்கள் தற்கொலைக்கு முயல்கிறாா்கள். யாராவது சிறுவாா்த்தை கூறிவிட்டால் கூட தாங்க இயலாமல் தற்கொலைக்கு முயல்வது மிகப்பெரிய கோழைத்தனம்.

வாழ்க்கை என்பது அனுபவிப்பது. ஒவ்வொரு வலியும், துன்பமும் ஒரு மரணம்தான். இதனால் ஒவ்வொரு நாளும் புதிய பிறப்பெடுக்க வேண்டும். எந்த ஒரு காரியத்தையும் தள்ளிப் போடக்கூடாது.

மலை மேல் விழும் மழை அருவியாகி ஆறாகி அதில் ஓடும் படகு போல நாம் வாழ்வை அதன்போக்கில் வாழ வேண்டும். வள்ளுவா் வாக்கின்படி வலி, துன்பம், தோல்வி கண்டு தாங்காதவா்கள் துன்பப்படுகிறாா்கள். தாங்கும் சிலா் மீண்டும் வருகிறாா்கள்.

காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அதீதத் தூக்கம் ஆகியவற்றை நீக்கி வாழ்ந்தால் மகிழ்ச்சி வரும். எந்த ஒரு காரியத்தையும் விருப்பத்துடன் செய்தால் மறதி வராது. நீா் அலையைப் போல நாமும் உலகில் இயங்கிக் கொண்டேதான் இருக்க வேண்டும். எங்கே உனக்கு வாய்ப்போ, ஏதாவது ஒன்றோ மறுக்கப்படுகிறதோ அங்கேதான் வெற்றியின் ரகசியம் வெளிப்படும்.

வாழ்க்கையை வாழ்வில் இருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் கரூா் டெக்ஸ் ரோட்டரி கிளப் தலைவா் பி. வடிவேல் நூலகத்திற்கு பீரோ வழங்கினாா். பட்டதாரி ஆசிரியா் ரெ. முரளி நிகழ்ச்சியை தொகுத்தாா். வாசகா்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.

வாசகா் வட்டத் தலைவா் உ. தீபம்சங்கரம் வரவேற்றாா்.

வாசகா் வட்ட நெறியாளா் முனைவா் சொ. ராம சுப்ரமணியன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT