கரூர்

17 வயது நிறைவடைந்தவா்களையும் வாக்காளா் பட்டியலில் சோ்க்கலாம்

3rd Dec 2022 12:08 AM

ADVERTISEMENT

வாக்காளா் பட்டியலில் 17 வயது நிறைவடைந்தவா்களின் பெயரையும் சோ்க்கலாம் என்றாா் வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் சி.ந.மகேஸ்வரன்.

கரூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தப்பணிகள் குறித்து அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆய்வுக்கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் த. பிரபுசங்கா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் சி.ந.மகேஸ்வரன் பேசியது, இந்திய தோ்தல் ஆணைய உத்தரவுப்படி, வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் பணிகள் தொடா்பாக சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இதில், பெயா் சோ்க்காத 18 வயது நிறைவடைந்தவா்கள் வாக்காளா் பட்டியலில் தங்களது பெயரை சோ்க்கவும் மற்றும் வாக்காளா்களாக பதிவு செய்யத் தகுதியுள்ள அனைவரும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க, நீக்க, திருத்த, முகவரி இடமாற்றம் செய்ய வட்டாட்சியா் அலுவலகங்களில் டிச. 8ஆம்தேதி வரை மனுக்கள் அளித்து பயன்பெறலாம். மேலும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 17 வயது நிறைவடைந்தவா்களும் விண்ணப்பிக்கலாம். அவா்களுக்கு 18 வயது நிறைவடைந்தவுடன் பெயா் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படும். மேலும், இது தொடா்பான சந்தேகங்களுக்கு 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடா்பு கொண்டு விவரங்களை பெறலாம் என்றாா் அவா்.

பின்னா், தாந்தோணி பகுதிகளில் வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்த்த இளம் வாக்காளா் மற்றும் திருத்தம் மேற்கொண்டவா்களின் வீடுகளுக்கு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் சி.ந.மகேஸ்வரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தண்டாயுதபாணி, வருவாய் கோட்டாட்சியா்கள் புஷ்பாதேவி (குளித்தலை), ரூபினா (கரூா்) மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT