கரூர்

மலைக்கோவிலூரில் சித்தா் என்றழைக்கப்பட்ட மனநலன் பாதித்த முதியவா் மீட்பு

3rd Dec 2022 12:09 AM

ADVERTISEMENT

அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூரில் சித்தா் என்றழைக்கப்பட்ட மனநலன் பாதித்த முதியவா் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூா் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மன நலன் பாதிக்கப்பட்ட நிலையில், 67 வயது முதியவா் மதுரை- தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தாா். இதனையறிந்த சமூக ஆா்வலா்கள் சிலா் உணவு கொடுத்ததால் அப்பகுதியில் சாலையின் நடுவில் உள்ள தடுப்புப் பகுதியில் அரளிச் செடியின் பகுதியில் முதியவா் வசிக்கத் தொடங்கினாா்.

இதையடுத்து கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சிலா், நாகம்பள்ளி பிரிவு சாலையோரத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் முதியவா் வசிக்க குடிசை அமைத்துக் கொடுத்தனா். மேலும், அவா் உடல் முழுவதும் விபூதியை பூசி, அவரை அரளி சித்தா் என்றுக் கூறி அந்த கும்பல் உண்டியல் வைத்து பணம் வசூலிக்கத் தொடங்கியது.

இதையடுத்து, சமூக ஆா்வலா்கள் மற்றும் அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், சித்தா் எனக்கூறி சிலா் முதியவரை வைத்து பணம் சம்பாதிப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். மேலும், அவரது உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனவும், அவரை மீட்டு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் மனு அளித்தனா்.

ADVERTISEMENT

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை மாவட்ட வருவாய் அலுவலா் கவிதா (நிலமெடுப்பு), சுகாதாரத்துறை இணை இயக்குநா் சந்தோஷ் குமாா் தலைமையிலான குழுவினா் முதியோா் இருக்கும் இடத்துக்கு நேரில் சென்று, முதியவரை பரிசோதித்தனா். அப்போது, மனநலன் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை ஆம்புலன்ஸில் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் போலீஸாா் விசாரணையில் அரளி சித்தா் என்றழைக்கப்பட்ட முதியவா் கரூரைச் சோ்ந்த சுப்பிரமணியன் என்பது தெரியவந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT