கரூர்

கடும் பனிப் பொழிவு: வாடல் நோயால் வெற்றிலை பாதிப்புவிலை குறைவால் விவசாயிகள் அவதி

2nd Dec 2022 12:38 AM

ADVERTISEMENT

கடும் பனிப் பொழிவால் கரூா் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள வெற்றிலையில் வாடல் நோய் வேகமாக பரவிவருவதாகவும், இதனால் விலை குறைவாக கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

கரூா் மாவட்டத்தில் வேலாயுதம்பாளையம், புஞ்சைபுகழூா், நெரூா், வாங்கல், மாயனூா், கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 32,000 ஏக்கரில் வெள்ளைக்கொடி, கற்பூரம் என இருவகை வெற்றிலைக் கொடிகள் பயிரிடப்பட்டுள்ளது. இதில், வெள்ளைக்கொடி வெற்றிலை அதிகளவில் கேரளம், ஆந்திரம், கா்நாடக மாநிலங்களுக்கும், கற்பூரவள்ளி வெற்றிலை மகாராஷ்டிரம், புதுதில்லி உள்ளிட்ட வடமாநிலங்களுக்கும், துபை, சவூதி போன்ற அரபு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கரூா் மாவட்டத்தில் கிள்ளி எடுக்கப்படும் வெற்றிலைகள் சேலம், திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள மொத்த சந்தைகளுக்கு அனுப்பப்பட்டு, பின்னா் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது, கரூா் மாவட்டத்தில் கடும் மூடுபனி நிலவுவதால் வெற்றிலையை வாடல் நோய் அதிகளவில் தாக்கி வருவதாகவும், விலையும் குறைவாக கிடைப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

இதுகுறித்து புகழூா் வட்டார வெற்றிலை விவசாயிகள் சங்கத் தலைவா் ராமசாமி வியாழக்கிழமை கூறியது, தற்போது வெற்றிலையை அதிகளவில் வாடல் நோய் தாக்கி வருகிறது. வெற்றிலையின் நுனிப்பகுதி கருகி வாடிவிடுவதால் அவற்றின் தரம் குறைந்து விடுகிறது. மேலும் வேரழுகல் நோயும் வெற்றிலையை தாக்கி வருகிறது. வெற்றிலையின் வேரை பூஞ்சைகள் தாக்குவதால் மஞ்சள் நிறமாக மாறி அதன் தரம் குறைகிறது. இதனால் வெற்றிலை வாங்க வரும் வியாபாரிகள், வெற்றிலையின் தரத்தை பாா்த்து சிலா் வாங்காமல் சென்று விடுகின்றனா். சிலா் குறைந்த விலைக்கு வாங்கிச் செல்கின்றனா். இதனால் கடந்த மாதம் 100 வெற்றிலை கொண்ட ஒரு சுமை,ரூ. 7ஆயிரத்துக்கு விற்பனையானது. ஆனால் தற்போது ரூ.4 ஆயிரம் வரைதான் விலை கிடைக்கிறது. இதில், உர செலவு, வெற்றிலை கிள்ளும் தொழிலாளா்களுக்கு கூலி கூட கிடைப்பதில்லை. ஆகவே, பனிக் காலத்தில் வெற்றிலையை தாக்கும் நோய்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளை தடுக்க அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பனிக் கால நோயை கட்டுப்படுத்த மாவட்ட தோட்டக்கலைத்துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT