கரூர்

சிறந்த விளையாட்டு வீரா், வீராங்கனைகள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கரூா் மாவட்ட ஆட்சியா் தகவல்

2nd Dec 2022 12:39 AM

ADVERTISEMENT

சிறந்த விளையாட்டு வீரா், வீராங்கனைகள் உதவித் தொகை பெற்ற விண்ணப்பிக்கலாம் என கரூா் மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாநில, தேசிய மற்றும் சா்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்ற விளையட்டு வீரா், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சிறப்பு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதில், தலைசிறந்த விளையாட்டு வீரா்களுக்கான சிறப்பு உதவித்தொகை (ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள விளையாட்டுக்கள் மட்டும்) அதிகபட்சம் 5 பேருக்கு ஓா் ஆண்டுக்கு மட்டும் அதிகபட்ச உதவித்தொகையாக ரூ.25 லட்சம் வரை வழங்கப்படும். பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டத்தில் அதிகபட்சமாக 50 பேருக்கும், 5 மாற்றுத் திறனாளிகளுக்கும் ஓராண்டுக்கு அதிகபட்ச உதவித்தொகையாக ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற 1.12.2022 அன்று 23 வயதுக்குள்பட்டவராக இருத்தல் வேண்டும். வெற்றியாளா்கள் மேம்பாட்டுத் திட்டத்தில் அதிகபட்சம் 100 பேருக்கு மிகாமலும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கும் ஓா் ஆண்டுக்கு மட்டும் அதிகபட்ச உதவித்தொகையாக ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும். இதற்கு 1.12.2022 அன்று 20 வயதுக்குள்பட்டவராக இருத்தல் வேண்டும்.

இந்த திட்டங்களில் பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரா், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை டிச.15ஆம்தேதி வரை சமா்ப்பிக்கலாம். ஏற்கெனவே அஞ்சல் வழியில் மற்றும் நேரடியாக விண்ணப்பித்திருந்தாலும் மீண்டும் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழியில் வரும் விண்ணப்பங்களைத் தவிர பிற விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT