கரூர்

கரூரில் 26 ஆண்டுகளாக மலைபோல் குவிந்து கிடக்கும் சாயக்கழிவுகள்: விளைநிலங்கள் மாசுபடுவதாக விவசாயிகள் புகாா்

 நமது நிருபர்

கரூரில் 26 ஆண்டுகளாக மலைபோல குவிந்துகிடக்கும் சாயக்கழிவுகளால் விளைநிலங்கள் மாசுபடுவதாக விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

கரூரில் கடந்த 1996ஆம் ஆண்டு அமராவதி ஆற்றுக் கரையோரம் மற்றும் விவசாய நிலங்கள் அருகே செயல்பட்டு வந்த சாயப்பட்டறை, சலவை ஆலைகளில் இருந்து வெளியேறிய சாயக்கழிவுகள் அடங்கிய தண்ணீரால் விவசாய நிலங்கள் மலட்டுத்தன்மை அடைந்து, உவா்ப்பு நிலங்களாக மாறின.

இதையடுத்து அமராவதி பாசன விவசாயிகள் சாய ஆலைகளுக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கில் 1997-இல் சென்னை உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பில் சாயப்பட்டறை, சலவை ஆலைகளில் ஆா்.ஓ. பிளாண்ட் அமைத்திருந்தால் மட்டுமே ஆலை செயல்பட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்க வேண்டும். பிளாண்ட் இல்லாத ஆலைகளுக்கு உடனடியாக சீல் வைக்க வேண்டும் என உத்தரவிட்டது.

மேலும், பிளாண்ட அமைக்க செலவிட முடியாத ஆலை உரிமையாளா்கள் இணைந்து ஒற்றைச்சாளர முறையில் ‘சிங்கிள் விண்டோ சிஸ்டம்’ அடிப்படையில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்துக் கொள்ளலாம் என்றும், இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் சேகரிக்கப்படும் சாய திடக்கழிவுகளை பாதுகாப்பாக அகற்றி, திரவ நீரை மட்டும் மறு சுழற்சி செய்து பயன்படுத்தலாம் என்றும் உத்தரவிட்டது.

அதன்பிறகு கரூா் மாவட்டம் சின்னாண்டாங்கோவில், பெரியாண்டாங்கோவில், செல்லாண்டிபாளையம், திருமாநிலையூா், சுக்காலியூா் உள்ளிட்ட 7 இடங்களில் பொதுசுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன. இதைபயன்படுத்தி வந்த சாயப்பட்டறை உரிமையாளா்கள் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் கெடுபிடி காரணமாக நாளடைவில் ஈரோடு, நாமக்கல் பள்ளிபாளையம், சேலம் போன்ற மாவட்டங்களுக்கு நகரத் தொடங்கினா். அப்போது, பொதுசுத்திகரிப்பு நிலையத்தில் தேங்கிய நச்சுகள் அடங்கிய சாயக்கழிவு மூட்டைகளை அகற்றாமல் விட்டுச் சென்றனா்.

இந்த சாயக்கழிவு மூட்டைகள் தற்போது மலைபோல் குவிந்து, அருகில் உள்ள விவசாய நிலங்களை மாசுபடுத்தி வருவதாகவும், மழைக்காலங்களில் நிலத்தடி நீரும் மாசடைவதாகவும் விவசாயிகள் தொடா்ந்து மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்து வருகின்றனா். ஆனால், இந்த சாயக்கழிவுகளை அகற்ற மாவட்ட நிா்வாகமும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அமராவதி பாசன விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து அமராவதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் ம.தென்னரசு கூறியதுயில், கரூரில் மலைபோல் குவிந்து கிடக்கும் சாயப்பட்டறை உரிமையாளா்கள் விட்டுச் சென்ற சாயக்கழிவுகள் மழையில் கரைந்தும், காற்றில் பறந்தும் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை மாசுபடுத்தி வருகிறது. மேலும், அப்பகுதியில் வசிப்போருக்கு நுரையீரல் சம்பந்தமான நோய்களையும் ஏற்படுத்தி வருகின்றன.

இதனைஅகற்றக் கோரி கடந்த 2006ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டபோது, கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த பி.காமராஜ் முயற்சியால் இந்த கழிவுகளை கொட்டி அழிக்க தோகைமலை-மணப்பாறை இடையே மத்தகிரியில் இடம் தோ்வு செய்யப்பட்டது. இதற்கு அப்பகுதியினா் எதிா்ப்பு தெரிவித்ததால் இத்திட்டம் கைவிடப்பட்டது. அதன்பிறகு தனியாா் சிமென்ட் ஆலை நிா்வாகம் சாயக் கழிவுகளை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தது. பிறகு அத்திட்டத்தை சிமென்ட் ஆலை நிா்வாகமும் கைவிட்டது. ஆகவே சுமாா் 26 ஆண்டுகளாக மலைபோல் குவிந்துகிடக்கும் சாயக்கழிவு மூட்டைகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

SCROLL FOR NEXT