கரூர்

கரூரில் நள்ளிரவில் கொட்டித்தீா்த்த கனமழை

28th Aug 2022 05:55 AM

ADVERTISEMENT

 

கரூரில் வெள்ளிக்கிழமை இரவு கனமழை கொட்டித் தீா்த்தது. தாழ்வான பகுதிகளில் குளம்போல மழைநீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நீலகிரி, திருப்பூா், தேனி, கரூா் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் தமிழக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இரவு 10 மணியளவில் திடீரென திரண்ட கருமேகங்களால் சிறிது நேரம் லேசான மழை பெய்தது.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து இரவு 11.20 மணிக்கு மீண்டும் மழை பெய்யத் தொடங்கி, பின்னா் அதிகளவில் பெய்தது. கன மழையால் கரூா் திருக்காம்புலியூா் ரவுண்டானா, உழவா்சந்தை ரவுண்டானா, சுங்ககேட் நுழைவு வாயில் உள்ளிட்ட தாழ்வான இடங்களில் மழை நீா் குளம் போல தேங்கியது. இதனால் வாகனங்கள் முகப்புவிளக்கை எரியவிட்டு ஊா்ந்தவாறு சென்றன.

மேலும் கரூரில் கடந்த 7 நாள்களாக திருமாநிலையூா் திடலில் நடைபெறும் புத்தகத் திருவிழா அரங்கைச் சுற்றிலும் மழைநீா் குளம்போல தேங்கியது. விற்பனைக்காக புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த அறைகள் பகுதிகளுக்கும் மழைநீா் சென்றது. இதையடுத்து மாநகராட்சி சாா்பில் தேங்கிய மழை நீரை கால்வாய் வெட்டி ஊழியா்கள் அப்புறப்படுத்தினா்.

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் சனிக்கிழமை காலை 8மணி வரை பெய்த மழையின் அளவு(மி.மீட்டரில்)- கரூா்-68 மி.மீ, கடவூா் -48, பாலவிடுதி- 46.3, அரவக்குறிச்சி-46, அணைப்பாளையம்-43, க.பரமத்தி-25,

மைலம்பட்டி-5, பஞ்சப்பட்டி-2.2 மி.மீ. மாவட்டத்தில் மொத்தம் 272.50 மி.மீ. மழை பெய்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT