கரூர்

‘சுமைப்பணி தொழிலாளா்களுக்கு வீடு கட்ட நிதி தேவை’

22nd Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சுமைப்பணித் தொழிலாளா்களுக்கு வீடு கட்ட ரூ. 4 லட்சம் நிதி வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளா் சம்மேளன பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சுமைப்பணி தொழிலாளா்கள் சங்க (சிஐடியு) கரூா் மாவட்ட 11 ஆவது ஆண்டுப் பேரவைக் கூட்டம் சிஐடியு சங்க கரூா் மாவட்டக் குழு அலுவலகக் கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ. விநாயகம் தலைமை வகித்தாா். சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளா் ஆா். வெங்கடபதி சிறப்புரையாற்றினாா். மாநில துணைத் தலைவா் ஏ.பிச்சைமுத்து, சிஐடியு சங்க மாவட்டச் செயலா் சி. முருகேசன், கட்டுமான சங்க மாவட்டச் செயலா் சி.ஆா். ராஜாமுகமது, சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலா் எம். தண்டபாணி, தையல் சங்க மாவட்டத் தலைவா் ஆா். ஹோச்சுமின், சங்க கரூா் மாவட்ட செயலா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில் வணிக வளாகம், வா்த்தக நிறுவனங்கள், ஒன்றிய அலுவலகங்கள், டாஸ்மாக் குடோன்கள் ஆகியவற்றில் பணிபுரியும் சுமைப் பணி தொழிலாளா்களுக்கு புதிய கூலி உயா்வுக்கான ஒப்பந்தப் பேச்சு வாா்த்தையை நடத்திட வேண்டும். கரூா் மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றிய அலுவலகங்களில் பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளா்களுக்கு பிஎப், இஎஸ்ஐ திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கிட வேண்டும், சுமைப்பணி தொழிலாளா்களுக்கு வீடு கட்ட ரூ. 4 லட்சம் வழங்கிட வேண்டும், 60 வயது பூா்த்தியடைந்த தொழிலாளா்களுக்கு மாதந்தோறும் ரூ. 3000 ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT