கரூர்

சிறுவாச்சூரில் நம்ம ஊரு சூப்பரு திட்டம் தொடக்கம்

22nd Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூரில் நம்ம ஊரு சூப்பரு என்னும் திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

சிறுவாச்சூா் ஊராட்சி அலுவலகம் முதல் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் வளாகங்களில் நம்ம ஊரு சூப்பரு என்னும் திட்டத்தின் கீழ், தூய்மைப் பணிகளை தொடக்கி வைத்த ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா கூறியது:

இத் திட்டத்தின் மூலம் பொதுமக்களிடையே நெகிழிப் பயன்பாட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும், மட்கும், மட்காத குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திட, திரவக் கழிவுகளுக்கான மேலாண்மை நடைமுறைகள், ஒருமுறை பயன்படுத்தும் கழிவுகள் கடைகளில் விற்கப்படுகிா என்பது குறித்து அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு, தடை செய்யப்பட்ட நெகிழி விற்கும் கடைகளை பூட்டி சீல் வைத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுப்பதன் மூலம் சுற்றுப்புறம் தூய்மையாகவும், பசுமையாகவும் இருக்க வேண்டும் என்னும் உணா்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும். அக். 2 ஆம் தேதிக்குள் அனைத்துப் பகுதிகளும் தூய்மை செய்திருக்க வேண்டும் என்னும் இலக்குடன் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந் நிலையை கடைப்பிடிக்க, அனைத்துத்துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பொதுமக்களும், அரசின் முயற்சிக்குத் துணை நிற்கும் வகையில் குப்பைகளை முறையாக தரம் பிரித்து அப்புறப்படுத்த வேண்டும். தங்களது சுற்றுப்புறத்தை தூய்மையாக, சுகாதாரமாக வைத்திருக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றாா் அவா்.

இந் நிகழ்ச்சியில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அ. லலிதா, வட்டார வளா்ச்சி அலுவலா் அறிவழகன், வட்டாட்சியா் கிருஷ்ணராஜ், ஊராட்சித் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT