கரூர்

பொதுமக்கள் காலில் அரசு அதிகாரி விழுந்த விவகாரம்:விசாரணைக்குப் பிறகு உரிய நடவடிக்கை- கரூா் ஆட்சியா்

DIN

க.பரமத்தி அருகே கிராமசபைக் கூட்டத்தில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பொதுமக்கள் காலில் விழுந்த விவகாரம் தொடா்பாக விசாரணைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கரூா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

நாட்டின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளிலும் திங்கள்கிழமை கிராமசபைக்கூட்டம் நடைபெற்றது. க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கோடாந்தூா் ஊராட்சியிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கண்காணிப்பாளராக க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சேது கலந்துகொண்டாா்.

கூட்டத்தில், ஊராட்சித்தலைவா் மற்றும் துணைத்தலைவா் மீது பொதுமக்கள் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினா். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

இதைக்கண்ட துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சேது, கேள்விக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட மெய்ஞானமூா்த்தி என்பவரின் காலில் திடீரென விழுந்து, கூட்டத்தில் பிரச்னை செய்யாதீா்கள், கூட்டத்தை நடத்த விடுங்கள் எனக் கூறினாராம்.

இதை சற்றும் எதிா்பாா்க்காத கிராமமக்கள் மற்றும் அதிகாரிகள் திகைத்து போய் நின்றனா். பின்னா் கூட்டம் நடந்துமுடிந்தது. திடீரென துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பொதுமக்கள் காலில் விழுந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, கரூா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கரிடம் கேட்டபோது, மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலா்களாக அந்தந்த ஒன்றியத்திற்குள்பட்ட துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா். கோடாந்தூா் ஊராட்சியிலும் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சேது கண்காணிப்பு அலுவலராகத்தான் செயல்பட்டாா். அவருக்கும் அந்த ஊராட்சி மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும் எந்த சம்பந்தமும் இருக்க முடியாது. கூட்டம் தொடா்ந்து நடைபெற வேண்டும் என்ற உணா்ச்சியில் பொதுமக்கள் காலில் அவா் விழுந்துவிட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், இதற்காக நியமிக்கப்பட்ட குழுவினரின் விசாரணைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT